ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில் நேற்றிரவு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் இலங்கை மவ்லவீ ரிஸ்வீ முஃப்தீ உரையாற்றினார். கூட்ட விபரங்கள் பின்வருமாறு:-
ஐக்கிய சமாதானப் பேரவையின் சார்பில், காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித்தெரு சந்திப்பிலுள்ள சுலைமான் வலிய்யுல்லாஹ் திடலில் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர், தாயிம்பள்ளி நிர்வாகி ஹாஜி எம்.எம்.அஹ்மத், இலங்கை காயல் நல மன்ற துணைச் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக், அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஜவாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரவை பொறுப்பாளர் மவ்லவீ முஹம்மத் இல்யாஸ் யூஸுஃபீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பேரவை மாநில துணைத்தலைவர் மவ்லவீ ஏ.அப்துர்ரஹ்மான் ஷிப்லீ மிஸ்பாஹீ வரவேற்றுப் பேசினார். பேரவையின் செயல்பாடுகள் குறித்து அதன் தென்மண்டல பொறுப்பாளர் மவ்லவீ எஸ்.கே.எஸ்.செய்யித் சுலைமான் மன்பஈ உரையாற்றினார்.
பன்னூல் ஆசிரியர் “முத்துச்சுடர்” மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் கருத்துரை வழங்கினர். பேரவையின் புதிய பொறுப்பாளர்களான சாளை செய்யித் முஹம்மத் புகாரீ, மவ்லவீ இல்யாஸ், மவ்லவீ செய்யித் சுலைமான் ஆகியோரை அவர் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
பின்னர், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவீ அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வீ முஃப்தீ சிறப்புரையாற்றினார்.
அவர் தனதுரையில், பவுத்த மதச்சார்புள்ள இலங்கை நாட்டில், எட்டு முதல் பத்து சதவிகித மக்கள்தொகையை மட்டுமே கொண்ட முஸ்லிம் சமுதாயம் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு உட்பட்டிருந்தாலும், ஜம்இய்யத்துல் உலமாவில், தரீக்காவாதிகள், தப்லீக் ஜமாஅத்தினர், ஸலஃபீகள், தவ்ஹீத் ஜமாஅத்தினர் என அனைத்து தரப்புகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான உலமாக்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அவர்கள் தம் தனி கருத்து வேறுபாடுகளை பொது விடயங்களில் வெளிப்படுத்தாமல் ஒன்றுசேர்ந்து ஒரு தலைமையின் கீழ் செயல்படுவதால், மொத்த இலங்கையிலும், அனைத்து சமயங்களைச் சார்ந்தோரும் பயன்படுத்தும் சுமார் ஐந்தாயிரம் நுகர்பொருட்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் “ஹலால்” முத்திரை அரசு உத்தரவின் பேரில் அச்சிடப்பட்டு மொத்த நாட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது...
கே.எஃப்.சி. உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கூட, தமது ரகசிய சேர்மானப் பொருட்களைக் கூட தமது அமைப்பிடம் காண்பித்து, அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே அவற்றைக் கொண்டு இறைச்சி பதார்த்தங்கள் தயாரிக்க இயலும்...
மொத்த இலங்கையிலும் பலதரப்பட்ட மக்கள் இருக்கின்றபோதிலும், பிறை அறிவிப்பில் தனித்தனி நிலைப்பாடு அவர்களிடையே கிடையாது. அவர்கள் அனைவரும் இந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவிப்புக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பார்கள்... ஜம்இய்யத்துல் உலமாவும் அவர்கள் அனைத்து தரப்பு உலமாக்களையும் கலந்தாலோசனை செய்தே எந்த அறிவிப்பையும் வெளியிடும்.
இது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நபித்தோழர்களான ஸஹாபாக்கள், கண்ணியத்திற்குரிய இமாம்கள் தம் வாழ்வின் மூலம் நமக்குக் கற்றுத் தந்துள்ள பாடமாகும்.
இன்று இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்து உலமாக்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளன. ஒருவருக்கொருவர் இணைந்து செயலாற்றுதல் இல்லை என்பது ஒருபுறமிருக்க, குறைந்தபட்சம் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக்கொள்ளக் கூட மிகவும் யோசிக்கும் நிலை...
ஒருபுறம் மக்கள் வட்டி, வரதட்சணை, கொலை, கொள்ளை, மது, சூது என தடுக்கப்பட்ட காரியங்களைத் துணிந்து செய்து தம் வாழ்வைப் பாழடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அவற்றைப் பற்றி முதலில் சிந்தித்து செயல்படாமல், நமக்குள்ளே தர்க்கித்து காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்...
காயல்பட்டினத்தைச் சார்ந்த ஒருவர் என்னிடம் வருத்தத்துடன் கூறினார்... “எனக்கு இங்குள்ள ஆலிம்களின் பேச்சைக் கேட்கவே பிடிக்கவில்லை...” என்று! ஆலிம்களின் பேச்சை விட பிடித்தது ஒன்றுமில்லை என்ற மனநிலையை இம்மக்களுக்கு நாம் என்று ஏற்படுத்தப் போகிறோம்...?
பல ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து, காடு மேடுகளை ஏறி இறங்கி இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சேகரித்துத் தந்தார்கள் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்தை! ஆனால், பிற்காலத்தில் தஃவா எனும் அழைப்புப்பணி நீர்த்துப் போனதால் இமாம் புகாரீ அவர்கள் பிறந்த இடம் இன்று சினிமா தியேட்டராக உள்ளது.
இதற்கெல்லாம் காரணம் நமது உலமாக்களிடையே உள்ள ஒற்றுமையின்மைதான் என்பதை யாராலும் மறுக்கவியலாது! என்றார்.
இறுதியாக நன்றியுரைக்குப் பின், குருவித்துறைப்பள்ளி இமாம் மவ்லவீ எம்.எல்.முஹம்மத் அலீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்த்து.
கூட்ட ஏற்பாடுகளை பேரவை பொறுப்பாளர் சாளை செய்யித் முஹம்மத் புகாரீ தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |