காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! என்ற
தலைப்பில் ஆய்வு செய்தி, 8 பாகங்களாக - மார்ச் 24 முதல் மார்ச் 26 வரை - வெளியிடப்பட்டிருந்தது.
அது சம்பந்தமாக கடந்த 27.03.2011 அன்று காலை 11.00 மணிக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப்
பேரவை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. மேற்படி செய்தித் தொகுப்பு குறித்து விளக்கம் கேட்பதற்காக காயல்பட்டினம்.காம் செய்தியாளரும்,
தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனருமான எஸ்.கே.ஸாலிஹ் அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கூட்டத்தின் உண்மை நிகழ்வுகள் குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! என்ற தலைப்பில் ஆய்வு செய்தி, 8 பாகங்களாக
- மார்ச் 24 முதல் மார்ச் 26 வரை - வெளியிடப்பட்டிருந்தது. அதனைக் கண்டித்து காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 27 ஞாயிறு அன்று காலை 11:00 மணியளவில் அப்துர் ரஷீத் என்ற அவ்லியா, காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் செய்தி
வெளியிட்டுவரும் என்னை (எஸ்.கே.ஸாலிஹ்) அலைபேசியில் தொடர்புகொண்டார். இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறித்து
விளக்கம் தேவை என்றும், அதற்காக ஐக்கிய பேரவை அலுவலகத்தில் கூடியிருப்பதாகவும், கூட்டத்திற்கு வரும்படியும் என்னை அழைத்தார்.
கூடியிருப்பது செயற்குழு கூட்டமா, பொதுக்குழு கூட்டமா என்று எந்த தகவலையும் அவர் தரவில்லை. எனினும், அழைப்பையேற்று நான் அங்கு
சென்றபோது, ஏற்கனவே பலர் அங்கு கூடியிருந்தனர்.
காயல்பட்டினம்.காம் வலைதளம் வெளியிட்டிருந்த செய்தி குறித்து அக்கூட்டத்தில் என்னிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டது. நானும் தேவையான
விளக்கங்களை அளித்தேன். மேலதிக விளக்கங்களைப் பெற்றிடும் பொருட்டு அச்செய்தியைப் பதிவு செய்திருந்த வலைதள அட்மினிடம்
அக்கூட்டத்திலேயே தொலைபேசி வாயிலாகக் கேட்குமாறும், நான் இணைப்பை ஏற்படுத்தித் தருகிறேன் என்றும், கூட்டத்திலுள்ள அனைவரும் அவரது
விளக்கத்தைக் கேட்கும் பொருட்டு ஸ்பீக்கரை ஆன் செய்து பேசலாம் என்றும் கூறினேன். ஆனால், தாங்கள் பிறகு கேட்டுக்கொள்வதாக அவர்கள்
அப்போது தெரிவித்தனர்.
பிறகு, தேர்தல் புறக்கணிப்பு குறித்த ஐக்கிய பேரவை நிலைபாடு என்ன என்று வினவினேன். தேர்தல் புறக்கணிப்புக்கு அவசியம் இல்லை என்று
செய்தி வெளியிடும்படி கூறினர். அதனை அதிகாரப்பூர்வமாகத் தரும்படி கேட்டேன். அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினர்.
பின்னர் கூட்டத்தை நிறைவுசெய்யும் பொருட்டு என்னை துஆ ஓத சொன்னார்கள். நான் துஆ ஓத, அத்துடன் கூட்டம் கலைந்தது. இதுதான் நடந்த
உண்மை.
ஆனால் ஐக்கிய பேரவை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூட்டம் நடந்ததாகவும், அதில் காயல்பட்டணம்.காம்
இணையதளத்துக்கு கண்டனம் உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் முடிவில் நான் துஆ ஒதியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நான் அங்கு இருக்கும் வரை அங்கு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை... அவ்வாறு நான் சார்ந்துள்ள இணையதளத்தைக் கண்டித்து
தீர்மானம் இயற்றியிருந்தால், நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு வெளிநடப்பு செய்திருப்பேனே தவிர, அங்கே அமர்ந்து துஆ ஓதி
கூட்டத்தை நிறைவு செய்திருக்க மாட்டேன்.
நிலைமை இவ்வாறிருக்க, அக்கூட்டம் குறித்த காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் அறிக்கையின் வாசகங்கள் எனக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டவன் என்ற அடிப்படையில், இறைவனுக்கஞ்சி நான் அங்கு அவதானித்த நிகழ்வுகளை வெளிப்படுத்தவே இந்த
அறிக்கையை வெளியிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[தொடரும்] |