வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காயல்பட்டினத்தை உள்ளடக்கிய திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று காலை 10.00 மணியிலிருந்து காயல்பட்டினம் நகரின் அனைத்து வீதிகளிலும் பரப்புரை செய்தார்.
காயல்பட்டினம் கொச்சியார் தெருவில் சில நிமிடங்கள் உரையாற்றிய அவர், தமிழக அரசு வழங்கி வரும் பல்வேறு கடனுதவிகள் வட்டியின் அடிப்படையில் இருப்பதால் முஸ்லிம் மக்கள் முழுமையான பயன்பெற இயலாத நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திட தமிழக முதல்வரை தான் கேட்டுக்கொள்ளவிருப்பதாகவும், நல்லாட்சி அமைந்திட தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறும் அவர் அப்போது கேட்டுக்கொண்டார்.
இருகரம் கூப்பி ஆதரவு கோரிய அவரை நகர வீதிகளில் ஆண்களும், பெண்களும் கையசைத்து வரவேற்றனர். அவர் சென்ற பல வீதிகளில் வீடுகளிலிருந்து மலர் தூவி அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. ஆங்காங்கே பொதுமக்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக ஒன்றிய - நகர நிர்வாகிகள் மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஊர்வலமாக உடன் சென்றனர்.
கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
படங்கள் உதவி:
M.M.ஷாஹுல் ஹமீத்,
மரைக்கார் பள்ளித் தெரு, காயல்பட்டினம். |