சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு அடுத்த இரண்டாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் 26.03.2011 அன்று மாலை 05.00 மணிக்கு, சிங்கப்பூர் Ferry Point Chaletஇல் துவங்கின.
தேனீர் விருந்து:
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் தம் குடும்பத்தினருடன் அன்று மாலையில் குறித்த நேரத்தில் கூட்டம் நடைபெறுமிடத்தை வந்தடைந்தனர். பயணித்து வந்தோரின் அலுப்பைப் போக்கும் வகையில் துவக்கமாக தேனீர்-மசால் வடை பரிமாறப்பட்டது.
க்ரிக்கெட் விளையாட்டு:
தேனீர் பரிமாற்றம் நிறைவுற்றதும், மன்ற உறுப்பினர்களும், குழந்தைகளும் க்ரிக்கெட் விளையாடினர்.
அதே நேரத்தில் உறுப்பினர்களுக்கான இரவு உணவு ஏற்பாடுகள் மறுபுறம் விமரிசையாகவும், பரபரப்போடும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கூட்ட நிகழ்வுகள்:
இரவு 08.00 மணிக்கு கூட்டம் முறைப்படி துவங்கியது. கூட்ட நடவடிக்கைகளை திரைமறைவிலிருந்து அவதானிக்கும் வகையில் பெண்களுக்கும் இடவசதி செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஷேக் அப்துல் காதிர், இறைமறை குர்அனின் இனிய வசனங்களை தனதினிய குரலில் கிராஅத்தாக ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
மன்றத் தலைவரின் வரவேற்புரை:
மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அழைப்பையேற்று பெருந்திரளாக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் தனது வரவேற்புரையில் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
புதிய நிர்வாகக் குழுவிற்கு ஒத்துழைப்பளித்தல்:
இதுவரை கடமையாற்றிய நிர்வாகக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பளித்தமைக்காக உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், 01.04.2011 முதல் 31.03.2013 வரையிலான அடுத்த இரண்டாண்டு பருவத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகக் குழுவுக்கும் முன்பை விட சிறப்பான ஒத்துழைப்புகளை மனப்பூர்வமாக உறுப்பினர்கள் வழங்கிட வேண்டும் எனவும், தலைமைப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ள போதிலும், நகர்நலன் கருதி புதிய நிர்வாகக் குழுவினருக்கு என்றும் வழிகாட்டியாக இருந்து கடமையாற்றவுள்ளதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.
நேர மேலாண்மை:
விலைமதிக்க முடியாத நேரத்தை சரியான முறையில் நிர்வகித்துச் செயல்படுவதென்பது வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் இன்றியமையாததெனவும், இதுவரை நேரத்தை நன்முறையில் திட்டமிட்டு பயன்படுத்தியது போல இனியும் செய்வதுடன், மன்றத்தால் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், கைபேசி குறுஞ்செய்திகளுக்கு உடனுக்குடன் பதிலளித்து, மன்றத்தின் அனைத்து நகர்நல நற்காரியங்களிலும் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தனதுரையில் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
மனைவியர் ஒத்துழைப்பு அவசியம்:
நகர்நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் உற்சாகத்துடன் செயலாற்றி வரும் மன்ற உறுப்பினர்களால் தம் குடும்பத்திற்கு சில நேரங்களில் நேரமளிக்க இயலாமற்போவதன் சிரமத்தை தான் நன்கு உணர்ந்துள்ளதாகவும், அதே நேரத்தில் இச்சிறு தியாகத்தால் விளையப்போகும் பெரும் நன்மைகளை மட்டும் கருத்தில் கொண்டு, தமதன்புக் கணவர்களுக்கு அன்பு மனைவியர் மன்றம் குறித்த பணிகளிலும், அவர்களின் இதர அனைத்து நற்கருமங்களிலும் முழுமையான ஒத்துழைப்பளிப்பதுடன், உறுதுணையாக இருக்குமாறும், இம்மகத்தான தியாகத்திற்காக கருணையுள்ள அல்லாஹ் நிறைவான நல்லருளைத் தருவான் என கூட்டத்தில் பங்கேற்ற மகளிருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
ஆண்டறிக்கை:
மன்றத் தலைவரின் இந்த வரவேற்புரையைத் தொடர்ந்து, மன்றச் செயலர் ரஷீத் ஜமான், கடந்த ஆண்டில் மன்றத்தால் / மன்றத்தின் தொடர்புடன் நிறைவேற்றி முடிக்கப்பட்ட செயல்திட்டங்களடங்கிய ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:-
***புதிய உறுப்பினர்களான காயல்பட்டினம் ஆலிம்கள் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் மஹ்ழரீ, மவ்லவீ நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ ஆகியோர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியிலும், மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ மஸ்ஜித் ஜாமிஆ சுலியாவிலும் இமாம்களாக பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர்.
***காயல்பட்டினம் மக்களுக்கு சிங்கையில் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
***2010ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் புதிதாக 10 காயலர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
***செயற்குழு உறுப்பினர்களில் ஐவர் மட்டும் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
***சிங்கப்பூர் ஜாமிஆ சார்பாக நடத்தப்பட்ட மீலாத் விழாவில் மன்றத்தினர் பங்கேற்பு.
***உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தில் மன்ற உறுப்பினர்கள் 37 பேர் உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ளனர்.
சிங்கை இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் துணைத்தலைவராக மன்றத் தலைவர் பொறுப்பேற்றுள்ளார்.
***ஏழை-எளிய, நிராதரவான காயலர் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி வழங்கப்பட்டுள்ளது.
***இக்ராஃவின் தலைவராக மன்றத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
***இக்ராஃவின் நிர்வாகச் செலவினங்களில் மன்றமும் பங்கெடுத்துக்கொண்டு அனுசரணை வழங்கி வருகிறது.
***2015ஆம் ஆண்டிற்குள் 100 காயலர்களை சிங்கையில் வேலைவாய்ப்பு பெறச் செய்வதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
***இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மன்றத்தின் 10 உறுப்பினர்கள் அனுசரணையாளர்களாக உள்ளனர்.
***ஏழை காயலர்களுக்கு உதவிடும் பொருட்டு மன்றத்தால் உண்டியல் நன்கொடை சேகரிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் நிறைவான பொருளாதார ஒத்துழைப்பு பெறப்படுகிறது.
***மன்றத்தின் வரவு-செலவுகளை கருத்திற்கொண்டு காரியங்களாற்றிடும் பொருட்டு மன்ற உறுப்பினர் ஹரீஸ் யோசனையில் வருங்கால செயல்திட்டங்களுக்கான நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர் 31.12.2010 தேதி வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் எஸ்.எச்.அன்ஸாரீ சமர்ப்பித்தார். 2010ஆம் ஆண்டில் மட்டும் மன்றத்தின் சார்பில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் உதவித் திட்டங்களுக்காக வினியோகிக்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். கணக்கறிக்கையில் தமக்கேற்பட்ட சந்தேகங்களுக்கு பொருளாளரிடமிருந்து தேவையான விளக்கங்களைப் பெற்ற பின்னர் உறுப்பினர்கள் அக்கணக்கறிக்கையை ஒருமனதாக அங்கீகரித்தனர்.
கூட்டத் தலைவர் சிறப்புரை:
பின்னர் கூட்டத் தலைவரும் சிறப்பு விருந்தினருமான ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா உரையாற்றினார். நகர்நலனைக் கருத்தில் கொண்டு மன்ற உறுப்பினர்கள் வலிமையான ஒற்றுமையுடன் தொடர்ந்து செயலாற்ற வேண்டுமென அப்போது அவர் தெரிவித்தார்.
ஏழை-எளிய காயலர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் பொருட்டு ஏராளமான தனி நபர்களும், மன்றங்களும் குறிப்பிடத்தக்க அளவில் சேவைகள் பல செய்துள்ளதாகவும், அவ்வாறு பல்வேறு செயல்திட்டங்களைத் தீட்டி நகர்நலப் பணிகள் செய்திடுவதற்காக மன்றங்களுக்கும், தனி நபர்களுக்கும் உந்துதலளித்ததில் காயல்பட்டினம்.காம் வலைதளத்தின் பங்களிப்பு மகத்தானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தலைவருக்கு பாராட்டும், நினைவுப் பரிசும்:
நகர்நலப் பணிகளில் சிங்கை மன்றத் தலைவரின் ஈடிணையற்ற ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பை பெரிதும் பாராட்டிப் பேசிய அவர், மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருப்பதாக புகழ்ந்துரைத்தார்.
பின்னர், மன்ற உறுப்பினர்கள் சார்பில் மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கு சிறப்பு விருந்தினர் ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா நினைவுப் பரிசு வழங்கினார்.
மார்க்க சொற்பொழிவு:
பின்னர் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் சிறப்புரையாற்றினார். ஒற்றுமையையும், நேர்வழியில் பொருளாதாரத்தைச் செலவிடுவதையும் வலியுறுத்தி அமைந்திருந்த அவரது உரையில், நபித்தோழர்களான ஸஹாபாக்கள் தம் வாழ்வில் பொருளாதாரத்தை செலவழித்த விதம் குறித்து ஆர்வமூட்டும் வகையில் விவரித்தார்.
உறுப்பினர்களுக்கான வினாடி-வினா போட்டி:
பின்னர், மார்க்க வினாடி-வினா போட்டியை அவர் நடத்தினார். மன்ற உறுப்பினர்களையும், மகளிரையும் இறைமறையின் இனிய வசனங்களையும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வழிமுறையையும் தெளிவாக அறிந்து, அதனடிப்படையில் செயல்படத் தூண்டுவதே இதுபோன்ற போட்டிகளின் நோக்கமாக அமைந்துள்ளது.
பின்னர், 01.04.2011 முதல் 31.03.2013 பருவத்திற்கான புதிய நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்களால் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு விருந்தினர் அறிவித்தார்.
புதிய நிர்வாகிகள்:
தலைவர்:
ரஷீத் ஜமான்
(த.பெ. முஹம்மத் ரஷாத்)
முன்மொழிந்தவர்: ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
வழிமொழிந்தவர்: ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத்
துணைத்தலைவர்:
அபூ முஹம்மத் உதுமான்
முன்மொழிந்தவர்: ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
வழிமொழிந்தவர்: பி.எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர்
செயலாளர்:
எம்.எம்.மொகுதூம் முஹம்மத்
முன்மொழிந்தவர்: ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
வழிமொழிந்தவர்: ஹஸன் மவ்லானா
துணைச் செயலாளர்கள்:
(1) எஸ்.எச்.அன்ஸாரீ
முன்மொழிந்தவர்: ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
வழிமொழிந்தவர்: வி.என்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி முஹ்ஸின்
(2) எஸ்.டி.ஸூஃபீ ஹுஸைன்
முன்மொழிந்தவர்: ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
வழிமொழிந்தவர்: முஹம்மத் அலீ
பொருளாளர்:
கே.எம்.டி.ஷேக்னா லெப்பை
முன்மொழிந்தவர்: ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
வழிமொழிந்தவர்: வி.என்.எஸ்.முஹ்யித்தீன தம்பி முஹ்ஸின்
துணைப் பொருளாளர்கள்:
(1) எஸ்.ஷேக் அப்துல் காதிர்
முன்மொழிந்தவர்: ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
வழிமொழிந்தவர்: நஹ்வீ ஏ.எம்.ஷெய்க் அலீ ராஸிக்
(2) எம்.எச்.முஹம்மத் இல்யாஸ்
முன்மொழிந்தவர்: ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
வழிமொழிந்தவர்: ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ
மன்றத்தை வழிநடத்துவோர்:
ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், எம்.என்.முஹம்மத் லெப்பை ஆகியோர் மன்றத்தை வழிநடத்துவோராக (Mentors of KWAS) நியமிக்கப்பட்டனர்.
மேற்கண்டவாறு மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது. பின்னர், புதிய பருவத்திற்கான 5 நிரந்தர செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 5 முதல் சுழற்சிப் பருவத்திற்கான செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யுமாறு மன்றத தலைவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், பின்வருமாறு செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்:-
நிரந்தர செயற்குழு உறுப்பினர்கள்:
(1) ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத்
(2) பி.எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர்
(3) டபிள்யு.கே.எம்.முஹம்தம் ஹரீஸ்
(4) எஸ்.எச்.உதுமான்
(5) ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ
சுழற்சி முறை முதல் பருவ செயற்குழு உறுப்பினர்கள்:
(1) ஹஸன் மவ்லானா
(2) முஹம்மத் உமர் ரப்பானீ
(3) எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர்
(4) செய்யித் லெப்பை
(5) டபிள்யு.இ.எம்.அப்துல்லாஹ்
மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சந்தா தொகையை அதிகரித்து நிர்ணயிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த கூட்டத்தில் அதுகுறித்து தீர்மானிக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இரத்த தானம்:
இரத்த தானம் செய்வதில் மன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காண்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட மன்றச் செயலாளர் ரஷீத் ஜமான், அவ்வாறு ஆர்வப்படும் மன்ற உறுப்பினர்கள் தமது ஒப்புதலை kwasingapore@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மன்றத்தின் புதிய செயலரது கைபேசிக்கு குறுஞ்செய்தியாகவோ அனுப்பித் தருமாறும், மன்றத்தின் புதிய செயலாளர், இரத்தம் தேவை பற்றிய விபரம் மற்றும் தேவைப்படும் இடம் குறித்த ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
கருத்தரங்கு:
Basic Accounting & Finance for Non Finance Professionals என்ற தலைப்பில், வரும் ஜூன் மாதத்தில் டி.என்.எச். கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஹாஜி எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நடத்தும் ஆய்வரங்கு (seminar) நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
படக்காட்சி:
மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்த பதிவுகள் அடங்கிய படக்காட்சி (slide show) மன்றச் செயலாளரால் காண்பிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அவற்றை மகிழ்வுடன் கண்டுகளித்து தமது பழைய நினைவுகளை மீண்டும் பகிர்ந்துகொண்டனர்.
“புற்றுக்கு வைப்போம் முற்று” படக்காட்சி:
பின்னர், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட “புற்றுக்கு வைப்போம் முற்று!” ஆவணப்படம் விரிதிரையில் காண்பிக்கப்பட்டது. இந்த ஆவணப்படக் குறுந்தகடை ஒவ்வொரு உறுப்பினரும் S$5 தொகைக்கு பெற்றுக்கொள்ளுமாறும், மன்றத்தின் புதிய செயலர் டி.வி.டி.யை நகலெடுத்து உறுப்பினர்களுக்கு வினியோகித்து, அதற்கான கட்டணத்தைப் பெற்று, சேகரிக்கப்பட்ட நிதியை ஆவணப்பட ஏற்பாட்டாளர்கள் வசம் ஒப்படைக்கும் பொறுப்பை சிரமேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
நன்றியுரை:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும், அனைவரது ஒற்றமை-ஒருமைப்பாட்டிற்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் மவ்லவீ நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவதாகக் கூறினார்.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லா நிலையில், மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இரவு உணவு விருந்துபசரிப்பு:
பின்னர் அனைவருக்கும் நெய்ச்சோறு, இறைச்சி, கத்திரிக்காய்-பருப்பு பதார்த்தங்கள் அடங்கிய இரவு உணவு விருந்து பரிமாறப்பட்டது.
புதிதாக மணவாழ்வு கண்டுள்ள “புதுமாப்பிள்ளை”களான பி.எஸ்.எம்.அப்துல் காதிர், உமர் ரப்பானீ, கே.எம்.மீரா ஸாஹிப் அம்ஜத் ஆகியோர் விருந்துக்கான அனுசரணை செய்திருந்தனர்.
உணவு தயாரிப்பு மிகவும் பிரமாதமாக அமைந்திருந்ததாகவும், இரவு உணவு ஆயத்தப்பணி மற்றும் மறுநாள் காலை நாஷ்டா ஏற்பாடு ஆகியவற்றை தலைமையேற்று செய்திட்ட மன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.உதுமான், கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, பாக்கர் ஸாஹிப் ஆகியோருக்கும், உணவு ஆயத்தப் பணிகளில் அவர்களுக்கு உறுதுணை புரிந்த மன்ற உறுப்பினர்களுக்கும் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக மன்றத் தலைவர் தெரிவித்தார்.
மகளிருக்கான வினாடி-வினா போட்டி:
இரவு உணவு விருந்துபசரிப்பு நிறைவுற்றதும், மகளிருக்கான வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் நிகழ்ச்சியை நடத்தினார். வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மன்ற உறுப்பினர்களும், விருந்தினர்களும் அன்றைய இரவுப் பொழுதை Chaletஇலேயே கழித்தனர். மறுநாள் காலையிலும் நிறைய போட்டிகள் நடத்தப்பட்டு வென்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
காலை 11.00 மணிக்கு மன்ற உறுப்பினர்கள் மனநிறைவுடன் கலைந்து சென்றனர். அவர்களை பல்வேறு பகுதிகளிலுள்ள அவரவர் தங்குமிடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெஞ்சம் மறப்பதில்லை...
மொத்தத்தில் இப்பொதுக்குழு நிகழ்வுகள் மன்ற உறுப்பினர்களின் - குறிப்பாக மகளிரின் நினைவுகளில் நீங்கா இடம்பெற்றுவிட்டது. நிகழ்வுகள் அனைத்திலும் ஆண்களை விட மகளிர் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|