தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, நகைச்சுவை நடிகர் வடிவேலு தொகுதி முழுவதும் பரப்புரை செய்து வருகிறார்.
இன்று காலை 11.00 மணிக்கு காயல்பட்டினம் வந்த அவர், பிரதான வீதி - பெரிய தெரு முனையில் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தற்போது தமிழக முதல்வராக உள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் ஐயா அவர்கள் ஜாதி - மத வேறுபாடு பாராமல் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு தலைவராக இருந்து நன்மைகள் பல செய்து வருகிறார்...
மீனவர்களுக்கு 1500 முதல் 2000 லிட்டர் வரை மானிய விலையில் டீசல் வழங்கியிருக்கிறார்... 350 முதல் 500 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கியிருக்கிறார்...
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று பலர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அதை கச்சிதமாக செய்து காட்டியிருப்பதன் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உற்ற நண்பனாக தன்னை நிரூபித்துக் காண்பித்துள்ளார்.
மக்கள் தலைவராவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அவை நமது கலைஞர் ஐயாவிடம் நிறைய இருக்கிறது... ஆனால் இந்த தமிழ்நாட்டில் ஒருவர் தன்னையும் தலைவர் என்றும், அடுத்த முதல்வர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வலம் வருகிறார்... தலை பெரிதாக இருந்தால் மட்டும் தலைவராகிவிட முடியாது... தலைக்குள் இருக்கும் மூளையும் பெரிதாக இருக்க வேண்டும்...
தனது பெயரைத் திருத்திக் கொடுத்த தன் கட்சி வேட்பாளரையே கை நீட்டி அடித்தவர்... தன்னை திரைத்துறையில் முன்னேற்றம் காணச் செய்த உற்ற நண்பர் இப்றாஹீம் ராவுத்தரை முகவரியில்லாமல் ஆக்கியவர்தான் இவர்... நடிக்கும் படங்களிலெல்லாம் முஸ்லிம்களைத் தீவிரவாதியாகவே சித்தரித்து, அவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரி போல தன்னைக் காட்டிக் கொண்டு, இந்த இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு தவறான வடிவம் கொடுக்க முயற்சித்தவர்...
அப்பேர்ப்பட்டவர்தான் இன்று தானும் முஸ்லிம்களுக்குத் துணைவன் என்று சொல்லி வாக்குகள் கேட்டு வருகிறார்... மக்கள் அவரை இலகுவாக இனங்கண்டு கொள்வார்கள்.
நமது கலைஞர் ஐயா அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் நிச்சயம் நடைமுறைக்கு வரும்... எதிர்க்கட்சித் திட்டங்களோ... வரூ......ம் ஆனா வராது....!
இவ்வாறு அவர் தனதுரையில் தெரிவித்தார்.
11.00 மணிக்கு வந்த அவரைக் காண்பதற்காக காலை 08.00 மணிக்கே காயல்பட்டினம் பிரதான வீதியில் ஆண்களும், பெண்களும் தனித்தனியே திரண்டிருந்தனர். பிரதான வீதியில் உரையாற்றிய பின், காயல்பட்டினம் பேருந்து நிலையத்திலும் சில நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |