கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை இம்மாதம் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடத்துவதென அதன் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது மன்றத்தின் 37ஆவது செயற்குழுக் கூட்டம் 01/04/11 - வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் மன்றத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.ஃபாஜுல் கரீம் இல்லத்தில் நடைபெற்றது. ஹாஜி சொளுக்கு செய்யித் முஹம்மத் சாஹிப் (சேம்சா) கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஏ.எச்.எஸ்.நஸ்ருத்தீன் இறைமறை வசனங்களை ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வரையிலான மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
மருத்துவ உதவிகளுக்கென உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு:
மருத்துவ உதவிகளுக்கு உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு தேவை என்று கடந்த மாதம் 14ஆம் தேதியன்று, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் செய்யித் ஹஸன் ஆகியோரிணைந்து, நமதூர் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அந்த வேண்டுகோளையும், இக்ராஃவை அனைத்துத் துறைகளுக்கும் கூட்டமைப்பாக்குதல், வலுவான நகர்மன்றம் அமைத்தல் குறித்த ஹாங்காங் பேரவை துணைத்தலைவர் வெளியிட்ட அறிக்கையையும் பரிசீலித்த மன்ற செயற்குழு, அது பற்றிய மேலதிக விபரங்களை சம்பந்தப்பட்டோரைத் தொடர்புகொண்டு முழுமையாகப் பெற்று, அதனைப் பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை மற்றும் காயல்பட்டினம்.காமிற்கு வேண்டுகோள்:
அண்மையில் காயல்பட்டினம்.காமில் வெளியான "சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்" என்ற தலைப்பில் வெளியான செய்தியும் அதற்கு ஐக்கிய பேரவையின் சார்பில் வெளியிடப்பட்ட மறுப்புச் செய்தியும் கடல் கடந்து வாழும் காயல் நகர மக்களுக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. இதுவிடயத்தில் இரு தரப்பினரும் சுமுகமான முறையில் பேசி தீர்வுகானும்படி எமது மன்றம் இருதரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது.
பொதுக்குழு கூட்ட அறிவிப்பு:
மன்றத்தின் 11ஆவது பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு நடத்துவது என்றும், கூட்டம் நடைபெறுமிடம் மற்றும் வாகன வசதிகள் குறித்த தகவல்கள் விரைவில் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் முஹம்மத் லெப்பை பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
(ஹாஃபிழ் நஸ்ருத்தீன் மூலமாக,)
கே.எம்.மீரான்,
செய்தித் தொடர்பாளர்,
கத்தர் காயல் நல மன்றம்,
தோஹா, கத்தர். |