தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் துறை சார்ந்த பணிகளில் ஏற்படும் குறைகளை பொதுமக்கள் பொருந்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தலைமை தேர்தல் அலுவலருமான சி.நா.மகேஷ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2011 ஏப்ரல் 13 அன்று நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க முக்கிய அலுவலர்கள் பெரும்பாலானோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 01.03.2011 முதல் தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் உள்ளதை அனைவரும் அறிவார்கள்.
இந்நிலையில் பொதுமக்களிடமிருந்து அத்தியாவசியமற்ற கோரிக்கைகளை செய்து தரக்கோரி கோரிக்கைகளும், அதனைத் தொடர்ந்து சில நேரங்களில் போராட்டங்களும் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் தேர்தல் பணியில் ஈடுபட இயலாத நிலை தென்படுவதாகக் கருதுகின்றனர்.
எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளான குடிநீர், பால் வினியோகம், மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளில் குறைவேற்பட்டால் அது தொடர்பான கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறும், இதர கோரிக்கைகள் குறித்து தேர்தல் முடிவுற்றவுடன் அவற்றின் தன்மைக்கேற்ப பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நேர் செய்யப்படும் எனவும் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |