தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் பரப்புரைகள் அனைத்துப் பகுதிகளிலும் மும்முரமடைந்துள்ளது ஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பும், அதிரடி நடவடிக்கைகளும் தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு பெரும் சோதனையாக இருந்து வருகிறது.
காயல்பட்டினம் திமுக வார்டு செயலாளர் வீட்டில் வைத்திருந்த ரூ.1.76 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயல்பட்டினம் ஓடக்கரையைச் சேர்ந்தவர் மாதவன் (43). இவர் 12ஆவது வார்டு திமுக செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கென பணம் வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்செந்தூர் பறக்கும் படை துணை தாசில்தார் ரமேஷ், சப் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஆகியோர் ஓடக்கரை சென்று மாதவன் வீட்டில் சோதனையிட்டனர்.
அப்போது வீட்டில் வைத்திருந்ததாக ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 300 மற்றும் 5 கரை வேஷ்டிகள், 19 துண்டுகள், 5 போர்வை ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து பறக்கும் படை துணை தாசில்தார் ரமேஷ் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |