தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் காயல்பட்டினம் முஸ்லிம்கள் திமுக-வுக்கு வாக்களிக்க வேண்டியது கடமை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தெரிவித்தார். கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் 03.04.2011 (நேற்று) இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது.
முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மீராஸாஹிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மீராசா, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், நகர துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், காங்கிரஸ் சார்பில் ஷாஜஹான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டாக்டர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் தமிழினியன் ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர், முஸ்லிம் லீக் மாநில பேச்சாளர் நெல்லை மஜீத் உரையாற்றினார்.
அதிமுகவில் இருந்தபோது, முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே இந்த வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவால் மிரட்டப்பட்டு, அதற்காகவே தான் வகித்து வந்த அமைச்சர் பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு, கட்சியை விட்டும் விலகி, திமுகவில் இணைந்தார். இந்த ஒரே காரணத்திற்காக வேண்டியே இத்தொகுதி முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.
மதச்சார்பற்ற கூட்டணி நிலைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கிடைத்த மூன்றிடங்களில் ஓரிடத்தை விட்டுக்கொடுத்தது முஸ்லிம் லீக். அதைக் கொச்சைப்படுத்த யாருக்கும் அருகதையில்லை.
கலைஞர் ஆட்சியில் அவர் செய்த எத்தனையோ சாதனைகளை சொல்லிச் சொல்லி வாக்கு கேட்கிறோம் நாம்... எதிர்க்கட்சிகள் அவ்வாறு ஏதேனும் சாதனைகளைச் சொல்லிக் காண்பிக்க முடியுமா...?
1952இல் பிச்சைக்காரர்களின் நிலையை எண்ணி கவலையுற்று திரைப்பாடல்களில் அக்கவலையை வெளிப்படுத்தினார். தன் கையில் முதல்வர் என்ற பொறுப்பு வந்ததும் அவர்களின் நலன் காக்கவென்றே ஒரு துறையை உருவாக்கியவர் கலைஞர். அப்பேர்ப்பட்டவரை ஒருமையில் இன்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
அண்ணாவை அறிஞர் அண்ணா என அனைவரும் சொல்லி மகிழ்ந்த அக்காலத்தில் “பேரறிஞர் அண்ணா” என்று அழைத்தார் நம் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத். அவரது பயிற்சிப் பாசறையில் வளர்ந்த நமக்கு இதுபோன்று அநாகரிகமாகவெல்லாம் பேசத் தெரியாது...
இட ஒதுக்கீடு எங்களால்தான் கிடைத்தது என்று அண்மையில் உருவான சில கட்சிகள் கொக்கரிக்கின்றன. இவர்கள் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே நம் முஸ்லிம் லீக் துவங்கிய காலந்தொட்டு அக்கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது. அதன் பொன்விழா மாநாட்டில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசிய நம் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் ஸாஹிப், “உங்களை விட்டுவிட்டு வேறு யாரிடம் கேட்போம் இட ஒதுக்கீட்டை....? நீங்கள்தான் தர வேண்டும் இட ஒதுக்கீட்டை....!!!” என்று கலைஞரை நேரடியாகப் பார்த்துக் கேட்டது இவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
முஸ்லிமை அமைச்சராக்குவதற்காக நான் முதலமைச்சராகவில்லை என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டும் வகையில், காயல்பட்டினத்திலிருந்து ஒரு ஓட்டு கூட திமுகவை விட்டும் வேறு கட்சிக்கு மாறி விழக்கூடாது என உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு நெல்லை மஜீத் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார்.
திமுக கூட்டணியை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும் என்ற தலைப்பின் கீழ் அவரது உரை பின்வருமாறு அமைந்திருந்தது:-
திமுக கூட்டணி அனைத்து பாட்டாளிகள், வன்னியர்கள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து சமுதாய பிரதிநிதித்துவத்தைக் கொண்ட அரிய கூட்டணி. இக்கூட்டணியின் எந்தவொரு கூட்டத்திலும் அனைத்து கூட்டணி கட்சிகளின் அங்கத்தினரும் ஒரே மேடையில் வீற்றிருக்கும் காட்சியை சாதாரணமாகக் காணலாம்.
ஆனால் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் எத்தனை சமுதாயங்கள் அங்கம் வகிக்கின்றன...? அவர்கள் என்றைக்காவது ஒரே மேடையில் அமர்ந்து பேசியதுண்டா...? அது முடியுமா....?
பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து கல்வித்துறையிலும் சிறுபான்மை முஸ்லிம்கள் சிறந்தோங்கும் பொருட்டு நிதியொதுக்கீடு செய்து தந்தவர் கலைஞர்.
முஸ்லிம் மாணவியர் தங்குவதற்காகவென்றே தமிழகத்தில் ஐந்து முக்கிய நகரங்களில் மாணவியர் தங்கும் விடுதி அமைத்துத் தந்தவர் அவர்.
உலமாக்கள் - பணியாளர் நல வாரியம் அமைத்து, இன்று அவர்கள் வாழ்வில் தன்னிறைவு காண வழிவகுத்தவர்... அவர்களுக்கு மிதிவண்டியும் வழங்கியவர்.
வரும் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வருவதையடுத்து, சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை இதுவரை கற்று வந்தோர் தமது கல்வி நிலை பாதிக்கப்படும் என அச்சப்பட்ட நேரத்தில், முஸ்லிம் லீக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அம்மொழிகளை சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழும் தொடர்ந்து கற்க வாய்ப்பேற்படுத்தித் தந்தவர்...
முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்களான கபருஸ்தான்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, ஆண்டுக்கு 20 கபருஸ்தான்களைத் தேர்வு செய்து, ஒரு கபருஸ்தானுக்கு ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சுற்றுச்சுவர் எழுப்பி பாதுகாத்துத் தந்துகொண்டிருப்பவர் கலைஞர்...
நடுவண் அரசு சிறுபான்மை மக்களுக்கென தனி அமைச்சகம் நிறுவியுள்ளதைப் போல, முதல்வர் கலைஞர் தலைமையிலான மாநில அரசு சிறுபான்மையினருக்கென தனிப்பிரிவை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் சமுதாயத்தை மகிழ்வடையச் செய்துகொண்டிருப்பவர்...
இன்று திமுக கூட்டணியில் பத்து முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அனைவருமே இலகுவாக வெற்றி பெறத்தக்க தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ஆக, நம் சமுதாயத்தைச் சார்ந்த பத்து பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகச் செல்வதற்கு வாய்ப்பேற்படுத்தித் தந்தவர் கலைஞர்...
முஸ்லிம்கள் நன்றாகத்தான் உள்ளனர்... அவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் தேவை? என்று கேள்வியெழுப்பிய, பாபரி மஸ்ஜித் இடிப்பதற்குக் காரணமான கரசேவைக் கும்பலுக்கு ஆதரவளித்த, ராமர் கோயிலை அயோத்தியிலன்றி எங்கு கட்டுவது? என்று ஆதங்கத்துடன் கேட்ட ஜெயலலிதாவை சமுதாயம் தோற்கடிக்க வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட வேண்டும்...
குறிப்பாக, இந்த காயல்பட்டினம் நகர மக்கள் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டியது கட்டாயக் கடமையெனக் கருத வேண்டும்...
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
இறுதியாக தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.
கடந்த இடைத்தேர்தலில் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற பெருங்காரணமாக அமைந்த இந்த காயல்பட்டினம் மக்களை என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன்...
இந்நகரின் முக்கிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டம் முப்பது கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. டெண்டர் விடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால் அதை செய்ய இயலவில்லை. நான் வெற்றிபெற்று, மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானதும் இம்மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திக் கொடுத்தவனாகவே வருவேன்...
மதச்சார்பற்ற தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை நிலைக்கச் செய்திடுவதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனக்குக் கிடைத்த மூன்றில் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்தது வாழ்வில் யாரும் எளிதில் மறக்க முடியாத தியாகம்... அதற்கு கைமாறையும் தலைவர் கலைஞர் செய்து தந்துவிட்டார்... இனியும் கைமாறு செய்யக் காத்திருக்கிறார்.
கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்களாட்சியை விரும்பாத ஒரு கூட்டம் திட்டமிட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவர்களின் கணிப்புகள் பொய்யென நிரூபிக்கும் வகையில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இந்நகர மக்களுக்கு மட்டுமின்றி, நம் தொகுதியிலுள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் நான் இன்றளவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்... என்னை எந்தச் சமுதாயத்திடமிருந்தும் எதிர்ப்பைப் பெறாதவன்... உங்களுக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன்... உழைக்கக் காத்திருக்கிறேன்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் செலுத்த உங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.
பரப்புரை கூட்டத்தின் இறுதியாக முஸ்லிம் லீக் நகர துணைச் செயலாளர் எம்.எல்.ஷேக்னாலெப்பை நன்றி கூறினார். மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
முன்னதாக, நேற்று மாலையில் முகவை சீனி முஹம்மத் நடத்திய முஸ்லிம் லீக் கொள்கை விளக்கப் பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. |