தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில், வாக்காளர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுகள் (voters slips) அல்லது வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க இயலாது என தூத்துக்குடி மாவட்ட தலைமை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
வாக்காளர் சீட்டு வினியோகம்:
இந்திய தேர்தல் ஆணையத்தால் 13.04.2011 அன்று நடத்தப்படவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2011இல், வாக்குப்பதிவு நாளன்று வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகிய விவரங்களை அறிந்து எளிதில் வாக்களித்திடும் வகையில் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு (voters slips) மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
வாக்காளர் சீட்டு வினியோக நாள்:
தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், மேற்கண்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகள் (voters slips) வருகின்ற 03.04.2011 மற்றும் 04.04.2011 ஆகிய இரு நாட்களில் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்கள் வசிக்கின்ற பகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது. ஒரு குடும்பத்திற்குட்பட்ட வாக்காளர் சீட்டுகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அக்குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் மொத்தமாக வழங்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
வாக்காளர் சீட்டில் இடம்பெற்றுள்ளவை:
மேற்கண்ட வாக்காளர் சீட்டில் வாக்காளர் பெயர், புகைப்படம், அவரது பெயர் இடம்பெற்றுள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். வாக்காளர் மேற்கண்ட வாக்காளர் சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதேனும் ஒன்று இருந்தால்தான் தனது வாக்கினை பதிவு செய்ய முடியும். மேற்கண்ட வாக்காளர் சீட்டில் புகைப்படம் தவறாக இருப்பின் புகைப்படத்திற்கு ஆதாரமாக தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்படும் ஆவணத்தை சமர்ப்பித்து வாக்களிக்கலாம்.
வாக்களிக்க வாக்காளர் சீட்டு (அ) வாக்காளர் அடையாள அட்டை அவசியம்:
சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை அல்லது வாக்காளர் சீட்டு உள்ள நபர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களித்திட இயலும் என்பதால் அனைத்து வாக்காளர்களும் தமது வாக்காளர் சீட்டினை தவறாமல் பெற்று அனைவரும் வாக்களித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஹெல்ப் லைன்:
வாக்காளர் சீட்டு தொடர்பாக வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு கிடைக்காமலோ அல்லது வேறு சந்தேகமோ இருப்பின் அதனை தெளிவுபடுத்தும் பொருட்டு பிரத்தியேகமாக ஒவ்வொரு தொகுதிக்கும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு ஹெல்ப் லைன் (help line) நிறுவப்பட்டுள்ளது. அந்த எண்ணில் தொடர்புகொண்டு வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
தொகுதி எண்: 213 விளாத்திகுளம்
ஹெல்ப் லைன்: 94875 35924
தொகுதி எண்: 214 தூத்துக்குடி
ஹெல்ப் லைன்: 94875 35925
தொகுதி எண்: 215 திருச்செந்தூர்
ஹெல்ப் லைன்: 94875 35926
தொகுதி எண்: 216 ஸ்ரீவைகுண்டம்
ஹெல்ப் லைன்: 94875 35927
தொகுதி எண்: 217 ஒட்டப்பிடாரம்
ஹெல்ப் லைன்: 94875 35928
தொகுதி எண்: 218 கோவில்பட்டி
ஹெல்ப் லைன்: 94875 35929
தூத்துக்குடி மாவட்டம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு எய்தி சாதனை படைத்திட அனைத்து வாக்காளர்களும் வாக்குச் சீட்டினை தவறாமல் பெற்று வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட தலைமை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |