தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலின்போது மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்கும் பொருட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து தரக்கோரி, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியை நடத்தி வரும் துளிர் அறக்கட்டளை சார்பில் தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு வேண்டுகோள் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் நகரில் செய்பட்டு வரும் துளிர் அறக்கட்டளை அனைத்து மாற்றத் திறனாளிகளின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது.
வருகிற 13 ஏப்ரல் 2011 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் எந்த வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில் உச்ச நீதி மன்றம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படி பணித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அனைவரும் வாக்குச் சாவடிக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் அவர்களின் சக்கர நாற்காலியை வாக்குச் சாவடி வரை கொண்டு செல்ல சாய்வு தள மேடை ஏற்பாடு செய்வதுடன், பார்வையற்றோருக்கு உதவும் வகையில் பிரெயில் முறையில் அமைந்த வாக்கு இயந்திரம் அமைக்கவும் இது போன்ற வசதிகள் மாற்றுத் திறனாளிகளுக்காக செய்யப்பட்டுள்ளன என்பதனை ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தவும் உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட உச்ச நீதி மன்ற அறிவுறுத்தானது மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தாங்கள் சிரமமின்றி வாக்களிக்க முடியும் என்று அறிவதுடன் ஒவ்வொரு வாக்குச் சாவடியும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக அமைய வேண்டும் என்ற நோக்கில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே வருகிற 13 ஏப்ரல் 2011 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தின் வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்யுமாறும் அவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் எந்த ஒரு வாக்குச் சாவடியிலாவது செய்யப்படாமலிருந்தால் அவற்றைச் செய்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் இது குறித்த தகவல்களை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் விழிப்புணர்வு பெறும் வகையில் ஊடகங்கள் வாயிலாக அறியச் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் துளிர் அறக்கட்டளையின் சார்பில் தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
இப்பணியை மேற்கொள்வதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை தவறாது நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.L.ஷேக்னா லெப்பை,
நிர்வாகி மற்றும் செயலர்,
துளிர் அறக்கட்டளை,
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி வளாகம், காயல்பட்டினம். |