தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலில் தமது சறுறுப்புறத்திலுள்ள அனைத்து பொதுமக்களையும் அவசியம் வாக்களிக்கச் செய்யுமாறு தூத்துக்குடி மாவட்ட மாணவர்களை, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தலைமை தேர்தல் அலுவலருமான சி.நா.மகேஷ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
என் இனிய மாணவச் செல்வங்களே! வருகிற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியன்று நமது மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து உங்கள் மூலமாக ஒரு பணியைச் செய்து முடித்திட விரும்புகிறேன்.
நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில், உங்கள் குடும்பம் மற்றும் அருகாமையிலுள்ள - வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரையும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்குச் சாவடி சென்று வாக்களிக்கக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
மேலும் எக்காரணத்தைக் கொண்டும் வாக்களிப்பதற்கு எவரிடமிருந்தும் பணமோ மற்றும் எவ்வித பரிசுப்பொருட்களோ வாங்காமல் மனசாட்சியுடன் ஜனநாயக முறைப்படி வாக்களித்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும்படி அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும்.
என்றும் நாட்டு நலனை விரும்பும் நீங்கள், உங்கள் வீடு மற்றும் அருகிலுள்ள அனைத்து அன்பர்களிடமும் எடுத்துக் கூறி, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, தூத்துக்குடி மாவட்டம் வாக்குப்பதிவில் 100 சதவிகிதம் எய்தி, நம் இந்தியத் திருநாட்டில் சாதனை படைக்க உதவிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்பணியை நீங்கள் சரியாகச் செய்வீர்கள் என நம்புகிறேன்.
ஏப்ரலில் வருவது கோடை விடுமுறை!
தவறாது வாக்களித்தால் தழைக்கும் நம் தலைமுறை!!
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |