We are United by Sports என்ற முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ஹாங்காங்வாழ் காயலரான அலீ ஃபைஸல் என்பவரால் துவக்கப்பட்டு, நகரின் சிறந்த விளையாட்டு வீரர்களைக் குழுவாகக் கொண்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப்.
நகரில் விளையாட்டுத் துறையில் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்குடன் துவக்கப்பட்ட இவ்வமைப்பு காயல்பட்டினத்திலும், ஹாங்காங்கிலும் இதுவரை பல்வேறு சுற்றுப்போட்டிகளை வித்தியாசமான முறையில் நடத்தியும், பிறர் நடத்தும் போட்டிகளில் பங்கேற்றும், விளையாட்டு ஆர்வலர்களை பெரிதும் கவர்ந்தெடுத்த சரித்திரத்தைக் கொண்டது.
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC), காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) என இருபெரும் விளையாட்டு மைதானங்கள் நகரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை அவரவர் மைதானங்களில் நடத்திக்கொண்டிருந்த வேளையில், வி-யுனைட்டெட் குழுவினரின் கற்பனையில் உருவான திட்டம்தான் - ஒரே சுற்றுப்போட்டியை இவ்விரு பெரும் மைதானங்களிலும் அவற்றின் நிர்வாகிகளுடைய மனப்பூர்வமான ஒத்துழைப்புடன் நடத்தியது.
இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக கால்பந்து, க்ரிக்கெட் உள்ளிட்ட பல போட்டிகளை சுற்றுப்போட்டிகளாக இவ்விரு மைதானங்களிலும் நடத்தியது வி-யுனைட்டெட்.
அந்த அடிப்படையில், கடந்த ஆண்டுகளைப் போன்றே இவ்வருடமும் கால்பந்து மற்றும் க்ரிக்கெட் போட்டிகளை வரும் மே, ஜூன் மாதங்களில் நகரளவில் பிரம்மாண்டமாக நடத்திட வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் திட்டமிட்டுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் துவங்கிவிட்டது.
காயல்பட்டினம் தைக்கா பஜாரில், ஐசிஐசிஐ வங்கியருகிலுள்ள அல்தாஃப் எண்டர்ப்ரைசஸ்,
பிரதான வீதியிலுள்ள பிஸ்மி கிஃப்ட் மற்றும் ஃபேன்சி
ஆகிய நிறுவனங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. போட்டிகளில் கலந்துகொள்ள் விரும்பும் வீரர்கள் இந்நிறுவனங்களில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தமது பங்கேற்பை உறுதி செய்துகொள்ளுமாறு வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு info@vunited.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு கேட்டறியுமாறு வி-யுனைட்டெட் கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல்:
வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பாக,
S.R.B.ஜஹாங்கீர்,
அல்தாஃப் எண்டர்ப்ரைசஸ்,
தைக்கா பஜார், காயல்பட்டினம். |