தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலை முன்னிட்டு அந்தந்த கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பரப்புரை வாகனங்கள் அணிவகுக்கத் துவங்கிவிட்டன. காயல்பட்டினத்தில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பரப்புரை வாகனங்கள் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டு, நகரின் உள்ளூர் பேச்சாளர்களைக் கொண்டு வீதி வீதியாக பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
இன்றிரவு 09.00 மணியளவில் காயல்பட்டினம் ஆறாம்பள்ளிவாசல் எதிரில் அதிமுகவின் பரப்புரை வாகனம் முகாமிட்டது. அக்கட்சியின் கலீஃபா செய்யித் முஹம்மத் என்பவர் பரப்புரை செய்தார்.
அவர் பேசி முடித்த சில நிமிடங்களில் திமுகவின் பரப்புரை வாகனம் அதே இடத்தில் முகாமிட்டது. அக்கட்சியின் சார்பில் அதன் உள்ளூர் “பிரச்சார பீரங்கி” என்றழைக்கப்படும் பாலப்பா உரையாற்றினார்.
அந்நேரத்தில் உற்சாக பானம் அருந்திய ஒருவர் வண்டி முன் வந்து, பேசிக்கொண்டிருந்த அவரிடம் “மிகுந்த மரியாதை”யுடன் மோதினார். எனினும், அதை சிறிதும் சட்டை செய்யாத பாலப்பா தொடர்ந்து உரையாற்றி, இரவு 10.00 மணிக்கு தனதுரையை நிறைவு செய்தார்.
இவ்விரு கட்சியினரும் செய்த இப்பரப்புரையை கட்சி பாகுபாடின்றி பொதுமக்கள் ரசித்துக் கேட்டனர்.
|