கேரள மாநிலம் திருவனந்தபுரம் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து திருவனந்தபுரம் காயல் நல மன்றத் தலைவர் எம்.முஹம்மத் அப்துல் காதிர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.
திருவனந்தபுரம் காயல் நல மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்ற நிர்வாகிகளின் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நம் மன்றம் இறையருளால் கடந்த 15.01.2010 அன்று துவக்கப்பட்டு, இன்றுடன் ஓராண்டும் இரண்டு மாதங்களும் ஆகிவிட்டன, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! தொடர்ந்து சீருடன் செயலாற்ற அன்பு உறுப்பினர்களாகிய உங்கள் யாவரின் மேலான துஆவும், நிறைவான ஒத்துழைப்பும் மிக மிக அவசியமாகும்.
கடந்த ஒரு வருட காலத்தில் நாம் நினைத்திராத நல்ல பல காரியங்கள் நம் மன்றத்தின் சார்பில் இறையருளால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. செயற்குழுக் கூட்டத்தில் அழகான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை செய்து முடிக்க் நம் மன்ற செயற்குழு உறுப்பினர்களும் முழு ஆர்வத்தோடும், முனைப்போடும் உள்ளனர்.
குறிப்பாக, திருவனந்தபுரம் நகரில் ஒரு “முத்துச்சாவடி” உருவாக்குதல்... அதற்கான முழு முயற்சி போர்க்கால அடிப்படையில் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்று இன்னும் பல நல்ல காரியங்களை நாம் தயக்கமின்றி செய்ய முனைவோம், இன்ஷாஅல்லாஹ்! ஆம், இக்காரியங்கள் அனைத்தையும் செயல்படுத்திட எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், அயராத வேலைப்ப்ளுவுக்கிடையிலும் தமது பொன்னான நேரத்தை செலவிட ஆயத்தமாக உள்ளனர் நம் மன்ற நிர்வாகிகள்!
ஆகையால், இவை யாவறைறையும் முறையாகவும், நிறைவாகவும் செய்து முடித்திட முக்கியத் தேவை “பொருளாதாரம்” அல்லவா? அதற்கு ஆதாரம் எது? நாம் நமக்குள் திரட்டிக்கொள்ளும் சந்தா தொகை மட்டுமே! ஆனால் அந்த சந்தா அனைத்து உறுப்பினர்களாலும் முழுமையாக செலுத்தி முடிக்கப்படவில்லை என்பதும், பலருக்கு நிலுவைத்தொகை உள்ளதென்பதும் நமது பணிகளைத் தொய்வடையச் செய்திடும் மிகப்பெரும் காரணியாக உருவெடுத்துவிடும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை. இதை நாம் நமது சிந்தையில் இருத்திக்கொள்ள வேண்டும்.
பொதுக் காரியங்களைப் பொருத்த வரை உள்ளதை மட்டும் கொண்டு செயலாற்றினால் போதும் என்ற மனநிலையில் நாமிருந்தால் அது முழுப்பலனை ஒருபோதும் தராது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். எனவே, அவை முறையாகச் செய்து முடிக்கப்படுவதற்கான ஆதாரங்களை நாம் இனங்கண்டாக வேண்டும்.
நற்சேவை நம் தேவை என்ற குறிக்கோளுடனும், வீருடனும் செயல்படத் துடிக்கும் இளைஞர்கள் நம் மன்றத்தின் தூணாக இருக்கின்றனர்... இருக்க வேண்டும். இதற்காக மூத்த செயல் வீரர்கள் வழிவிட ஆயத்தமாகவே உள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
இதுபோன்ற பல நல்ல அம்சங்கள் குறித்து நமக்குள் கலந்தாலோசிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஓர் ஏற்பாடுதான் இன்ஷாஅல்லாஹ் வரும் 17.04.2011 அன்று நடைபெறவுள்ள நம் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம்!
17.04.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை. நமது திருவனந்தபுரத்தில் அனைவருக்கும் விடுமுறை நாள்! அதைக் கருத்தில் கொண்டே இந்நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டை, அட்டக்குளங்கரை காவல் நிலையம் எதிரிலுள்ள இக்பால் நூலக அரங்கில் நம் மன்ற பொதுக்குழு அன்று காலை 10.30 மணிக்கு உற்சாகத்துடன் நடத்தப்படவுள்ளது.
கூட்ட நிறைவில் மதிய உணவு விருந்துபசரிப்பும் காத்திருக்கிறது. நமக்குள் மகிழ்ச்சியாக அளவளாவும் அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமாக நகர்நலப் பணிகளையும் பிற மன்றங்களைப் போலவோ, அவற்றை விடவும் சிறப்பாகவோ செய்ய நாம் இப்பொதுக்குழுவில் உறுதியெடுக்க வேண்டியுள்ளது.
எனவே, நம் மன்ற உறுப்பினர்கள் தயவுகூர்ந்து அன்றைய தினத்தில் வேறெந்த காரியங்களுக்கும் நேரம் ஒதுக்காமல், அன்றைய பகல் பொழுதை நம் மன்ற பொதுக்குழு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் விருந்துக்காக ஒதுக்கி, ஆவலுடன் பங்கேற்று, அரிய பல நல்லாலோசனைகளை வழங்கி, நகர்நலப் பணிகளில் உறுதுணை புரிய வருமாறு உங்களை நம் மன்ற நிர்வாகிகள் அனைவர் சார்பாகவும் அன்புடனும், உரிமையுடனும் மனமுவந்து அழைக்கின்றேன்.
இவ்வாறு திருவனந்தபுரம் காயல் நல மன்ற தலைவர் எம்.முஹம்மத் அபதுல் காதிர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். |