காயல்பட்டணம்.காம் இணையதளம் பத்தாண்டுகளுக்கும் மேலாக காயல்பட்டின நகர நடப்பு செய்திகளையும், உலகெங்கும் வாழும் காயல் நகர
மக்களின் செய்திகளையும் வெளியிட்டு வருகிறது. எவ்வேளையிலும் இணையதளம் - அதுவே ஒரு செய்தியாவதை விரும்பியது இல்லை. கடந்த
ஆண்டுகளில் நகரம் எதிர்நோக்கிய பல பிரச்சனைகளில் தாம் வெறும் ஊடகம் தானே என்று இருந்துவிடாமல், அப்பிரச்சனைகளில் தனது
ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பையும், செயல்திட்டங்களையும் காயல்பட்டணம்.காம் வழங்கியுள்ளது என்பதினை நினைவு கூறுகிறோம்.
இருப்பினும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் அர்த்தமற்ற
குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளதால் - அதற்க்கான விளக்கமான பதிலினை அளிக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதினை
பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
முதலில் சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! என்ற தலைப்பில் ஆய்வு செய்தி
வெளியிட்டதற்கான சூழ்நிலையை விளக்கிவிட்டி, ஐக்கிய பேரவை அறிக்கையில் கூறப்பட்டுள்ள
குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்கள் தருகிறோம்.
கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி நடந்த ஐக்கிய பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் காயல்பட்டினம்
கறுப்புடையார் பள்ளி (சிங்கித்துறை) வட்டத்தில் நடைபெறும் 169 வீடுகளின் கட்டுமான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில்
இத்திட்டம் குறித்த நடப்பு அரசின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அக்கூட்டத்தின் முழு நிகழ்வுகள் வீடியோ பதிவும் செய்யப்பட்டது
என்பதனை நினைவு கூறுகிறோம். பின்னர் அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் ஜனவரி 4 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும்
தீர்மானிக்கப்பட்டது. பின்னர் இப்பிரச்சனை குறித்து நகரில் கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம், துணை முதல்வருக்கு பாக்ஸ் அனுப்புதல், முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்புதல் என பல நிகழ்வுகள் நடந்தேறின. அவைகள் அனைத்தையும் காயல்பட்டணம்.காம்
செய்திகளாக வெளியிட்டுள்ளது.
செய்திகள் வெளியிட்டோம் என்று மட்டும் இருக்காமல், இப்பிரச்சனை (சுனாமி குடியிருப்புகள்) குறித்த உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும்
எனும் பொருட்டு - தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தமிழக அரசின் பல துறைகளிடம் (தமிழக சுற்றுப்புற சூழல்
அமைச்சகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சுனாமி திட்டக்குழு
என பல துறைகளிடமும்) வினாக்களை எழுப்பி, அவர்கள் வழங்கிய பதில்களையும் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிட்டும் வந்துள்ளோம்.
ஊடகம் என்று தரப்படும் செய்தியினை மட்டும் வெளியிட்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஐக்கிய பேரவையால் நகரம் நோக்கியுள்ள மிகப் பெரிய
பிரச்சனை இது என சித்தரிக்கப்பட்ட ஒரே காரணத்திற்க்காக, இணையதளமே இதுகுறித்த பல தகவல்களை வெளிக்கொண்டுவந்தது.
அதுமட்டும் அன்றி - ஜனவரி மாதம் இறுதியில் ஐக்கிய பேரவைக்கு தொடர்புடைய அப்துல் ரஷீத் என்ற அவ்லியா என்பவர் - காயல்பட்டணம்.காம்
இணையதளத்தை தொடர்புக்கொண்டு இவ்வழக்கு (சுனாமி குடியிருப்புகள்) குறித்து, நகராட்சியின் அதிகாரம் சம்பந்தமாக உயர் நீதிமன்ற தீர்ப்பு
ஏதேனும் இருந்தால் தேடித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதனையும் காயல்பட்டணம்.காம் அவர்களுக்கு எடுத்து கொடுத்தது என்பதனை நினைவு
படுத்துகிறோம்.
இச்சூழலில் தான் மார்ச் 1 அன்று தமிழகத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேலும் மார்ச் 19 அன்று வேட்பாளர் மனுதாக்கல் துவங்கியது. இருப்பினும் - ஜனவரி மாதமும், பிப்ரவரி மாதமும் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை வெளியிட்டிருந்த ஐக்கிய பேரவை, மார்ச் 1 அன்று தேர்தல் அறிவிப்பு வெளிவந்தும், மார்ச் 19 அன்று வேட்பு மனு தாக்கல் துவங்கிய பின்பும், இது குறித்த எந்த அறிவிப்பையும் மக்களுக்கு தெரிவிக்காததினால் - ஆதங்கத்துடன் - தற்போது சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆய்வு செய்தியை மார்ச் 24 அன்று வெளியிட்டோம்.
[பாகம் - 1]
[தொடரும்]
|