வட அமெரிக்க காயல் நல மன்றத்தின் (நக்வா) 6ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் அம்மன்றத்திற்கான உள்ளூர் பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டார். தொலைபேசி வாயிலாக நடைபெற்ற பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
வட அமெரிக்க காயல் மன்றம் - நக்வாவின் 6ஆவது பொதுக்குழுக் கூட்டம் 27.03.2011 ஞாயிற்றுக்கிழமையன்று தொலைபேசி வாயிலாக நடந்தேறியது. மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்ட இக்கூட்டத்தை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.தவ்ஃபீக் வழிநடத்தினார். அவரது மகள் ஷுரஃபா, மற்றொரு செயற்குழு உறுப்பினர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் மகள் ஸஹ்லா ஆகியோரிணைந்து இறைமறை குர்ஆனின் இனிய வசனங்களை ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தனர்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
பின்னர் மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மன்றத்தின் 2011ஆம் ஆண்டின் காலாண்டு சந்தா கணக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதுகுறித்து விவரிக்கப்பட்டது. கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
நக்வாவின் அண்மைச் செயல்பாடுகள்:
இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நக்வாவின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் அதன் அதன் இயக்கம் குறித்து செயற்குழு உறுப்பினர் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினம் உடல்நலன் ஆய்வு:
நக்வாவின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் அலீ ரஸா அவர்களளித்த ஊக்கத்தால், வட அமெரிக்க காயல் நல மன்றம் (நக்வா), தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் ஆகிய அமைப்புகள் கூட்டாக நடத்தி வரும் “Kayalpatnam Health Survey” பற்றியும், அதன் தற்போதைய நிலவரம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அறிவியல் பூர்வமாக நடைபெறும் இந்த கருத்து சேகரிப்பில் காயல்பட்டினம் நகர பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொள்வதன் மூலம், நகரில் நோயில்லா வாழ்வை உருவாக்க உதவுமாறு இப்பொதுக்குழு அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
பள்ளிக் கல்விக் கட்டணத்திற்கு நிதியுதவி:
அடுத்து, நடப்பாண்டில் ( 2011 - 2012 ) பொருளாதாரத்தால் நலிவுற்றிருக்கும் +1 பயில இருக்கும் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளை இனம் கண்டு அவர்களுடைய +1 மற்றும் +2 பள்ளி பீஸை பள்ளி நிர்வாகத்தோடு கலந்து பேசி, நக்வா பொறுப்பேற்றுக் கொள்வது பற்றி செயற்குழு உறுப்பினர் தவ்ஃபீக் விளக்கி கூறினார். அதற்கான இனம் காணும் பணி துவக்கப்பட்டு விட்டது. இன்னும் சில பள்ளிகளில் இருந்து விளக்கம் பெற வேண்டி இருக்கிறது. முழுவதும் பெறப்பட்டவுடன் அதற்கான தணிக்கை ஆரம்பிக்கப்படும்.
உள்ளூர் பிரதிநிதி நியமனம்:
நக்வாவின் செயல்களை உள்ளூரிலிருந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதன் பிரதிநிதியாக செயல்பட சகோதரர் உ.ம.ஷாகுல் ஹமீத் அவர்களை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
நமதூரில் செயல்பட்டு வரும் சில தொடக்கப்பள்ளிகளில் அடிப்படை வசதி கூட இல்லாத நிலையைக் கண்டு மன்றம் கவலை தெரிவித்தது. வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் பள்ளி நிர்வாகங்களோடும் மற்றும் இதர நற்பணி மன்றங்களோடும் இணைந்து இந்த துயர் துடைக்க பாடுபட வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது.
பள்ளிக்கூடங்களுக்கு வேண்டுகோள்:
நமதூரில் நன்றாக படித்தும் நல்ல மதிப்பெண் பெற்றும் வேலைக்காக நேர்காணலில் வெற்றி பெற முடியாமல் போவதற்கு English Communication Skills இல்லாததுதான் காரணம் என்றும், எனவே அக்குறையைப் போக்கும் பொருட்டு எல்லா பள்ளிகளிலும் சிறிய வகுப்பு முதலே அந்த பயிற்சியை பள்ளி நிர்வாகங்கள் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் பேசப்பட்டவை:
மேலும் நமதூரில் செவ்வனே நடைபெற்று வரும் ஆயிஷா சித்தீகா பெண்கள் கல்லூரியின் ஆசிரியர்களின் பொருளாதார நிலையை மன்றம் கலந்தாலோசித்தது.
நமதூரில் தற்போது அதிகமாக பரவி வரும் புற்று நோய் பற்றியும் அதற்காக பல மன்றங்கள் எடுத்து வரும் முயற்சிகளைப் பற்றியும் விவரிக்கப்பட்டது. தற்போது வெற்றிகரமாக வெளியிடப்பட்ட "புற்றுக்கு வைப்போம் முற்று" என்ற குறுந்தகடு வெளியீட்டுக்கு நக்வா உறுதுணை புரிந்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. புற்றுநோய் ஊரில் உயிர்களைக் காவு வாங்கி வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
சுழற்சிமுறையில் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு:
நக்வாவால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நல்ல முறையில் செவ்வனே செய்திடும் பொருட்டு அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து சகோதரர் ஷாம் ஜவ்சகி விளக்கிப் பேசினார். மன்றம் அதை மனப்பூர்வமாக அங்கீகரித்தது.
நக்வா நிர்வாகச் செயல்பாடுகள் செவ்வனே செயல்படுத்தப்படும் பொருட்டு, ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நக்வா அமைப்பின் சார்பாக,
சாளை முஹம்மத் முஹ்யித்தீன்,
கலிஃபோர்னியா, வட அமெரிக்கா. |