வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காயல்பட்டினத்தை உள்ளடக்கிய திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றவிருக்கும் அலுவலர்களுக்காக திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட பயிற்சி முகாமில் 1027 பேர் பங்கேற்றனர்.
திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பொற்கொடி மற்றும் திருச்செந்தூர் தாசில்தார் வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையுரையாற்றிய மாவட்ட வருவாய் அலுவர் துரை ரவிச்சந்திரன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்கும் முறை, வாக்குப்பதிவின்போது பணியில் ஈடுபட வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கினார்.
முகாமில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை 1,நிலை 2 மற்றும் நிலை 3 என மொத்தம் 1027 பேர் கலந்து கொண்டனர்.
பயிற்சி வகுப்பில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இளங்கோ, துணை தாசில்தார் செந்தூர்ராஜ், பறக்கும்படை துணை தாசில்தார் ரமேஷ், தேர்தல் துணை அலுவலர் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர்கள் கோபால், சுந்தர்ராகவன், பேச்சிமுத்து மற்றும் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வாக்குச்சாவடி அலுவலராக முதுநிலை ஆசிரியர்களையும் ஆசிரியர்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதென கூறி, முதுநிலை ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பை புறக்கணித்தனர். இதனை அறிந்து கோட்டாட்சியர் பொற்கொடி, இது முதற்கட்ட பயிற்சி வகுப்புதான்... விரைவில் இது சரி செய்யப்படுமென உறுதி அளித்ததைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் கழித்து முதுநிலை ஆசிரியர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர். இதனால் பயிற்சி வகுப்பு தாமதமாகத் துவங்கியது. |