உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு இலச்சினை ஒன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்ராஃ செயலாளர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நமது இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு இலச்சினை ஒன்று மிகவும் அவசியமாகத் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு கூட்டங்களில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டு, இறுதியாக இதற்கென போட்டி நடத்தி பலரது படைப்புகளையும் பெற்று அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் நமது காயல்பட்டணம்.காம் வலைதளம் மூலம் இலச்சினை உருவாக்கப் போட்டி அறிவிக்கப்பட்டு, பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்குப் பிறகு பலதரப்பட்ட காயலர்களிடமிருந்தும் 25 இலச்சினைகள் பெறப்பட்டன.
இக்ராஃ துணைத் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர், தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களின் இறுதி முடிவின்படி பின்வரும் இலச்சினை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலச்சினையை உருவாக்கியதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் காயலர் ஹுஸைன் நூருத்தீன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு இக்ராஃ தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.
இலச்சினை உருவாக்கப் போட்டியைக் கருத்தில் கொண்டு, தமது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையிலும் பல்வேறு படைப்புகளை உருவாக்கி ஆர்வத்துடன் அனுப்பித் தந்த அனைவருக்கும் இக்ராஃ தனது நெஞ்சம் நிறைந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது.
இக்ராஃ தலைவரின் இடையறாத வேலைப்பளு காரணமாக இலச்சினை தேர்வு செய்வதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. தேர்வு செய்யப்பட்ட இலச்சினைக்கான பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். |