ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று கூட்டப்படும் என அம்மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் மார்ச் மாத செயற்குழுக் கூட்டம் மார்ச் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு, மன்றத் தலைவர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தலைமையில் அவரது இல்லத்தில் இறையருளால் நடைபெற்றது.
தேனீர் உபசரிப்புக்குப் பின், ஹாஜி எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
பின்னர், அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், மன்றத்திற்கு இலச்சினை உருவாக்கம், மலர் வெளியீடு குறித்து அதன் பொறுப்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள், இனி அவர் செய்ய வேண்டிய பணிகள், மலருக்கான விளம்பரங்களைப் பெறல் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர், காயல்பட்டினம் நகரில் அதிகரித்து வரும் புற்றுநோய்க்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள CFFC குழுமம் இதுவரை செய்து முடித்துள்ள செயல்திட்டங்கள், இனி செய்யவுள்ள செயல்திட்டங்கள், இவ்வகைக்காக அனைத்துலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனி ஆர்வலர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் கூட்டத்தில் விவரித்துப் பேசினார்.
இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1 - ஏப்ரல் 15இல் பொதுக்குழு:
மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று துபை அல்-ஸஃபா பூங்காவில் (Al-Safa Park) நடத்திட தீர்மானிக்கப்பட்டதுடன், கூட்ட ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு, பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - மன்றத்திற்கான இலச்சினை தேர்வு:
மன்றத்திற்கு இலச்சினை உருவாக்குவதற்காக அறிவிக்கப்பட்ட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலச்சினைக்குரிய வெற்றியாளருக்கும், ஆர்வத்துடன் இலச்சினைகளை உருவாக்கி அனுப்பித் தந்த அனைவருக்கும் வரும் பொதுக்குழுக் கூட்டத்தில் பரிசுகள் வழங்கி கவுரவிக்க முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 3 - அபூதபீ உறுப்பினர்களுடன் தனி சந்திப்பு:
அபூதபீ நகரில் இருக்கும் மன்றத்தின் உறுப்பினர்களை, பொதுக்குழுக் கூட்டத்தின்போது தனியே சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் செயல்பாடுகள் மற்றும் மன்றத்திற்கான அவர்களின் ஒத்துழைப்புகள் குறித்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - மலர் வெளியீட்டு ஏற்பாடுகள்:
மன்றத்தால் விரைவில் வெளியிடப்படவுள்ள மலரை அலங்கரித்திடும் பொருட்டு மன்ற உறுப்பினர்கள் தாம் பணியாற்றும் நிறுவனங்களில் விளம்பரங்களைப் பெற்றுத் தரக் கோருவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - CFFCக்கு முழு ஒத்துழைப்பு:
காயல்பட்டினம் நகரில் பெருகி வரும் புற்றுநோய்க்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள CFFC குழுமத்திற்கு இக்கூட்டம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதன் இவ்வரிய முயற்சிக்கு மன்றம் தன்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் தொடர்ந்து செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணைத்தலைவர்,
அமீரக காயல் நல மன்றம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |