நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக உருவாகியுள்ள அதிமுக-தேமுதிக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என காயல்பட்டினத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் நடிகர் பாக்யராஜ் பேசினார்.
வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
தி.மு.க. கூட்டணியை ஆதரித்து திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் இன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல ஊர்களிலும் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். இன்று மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் பிரதான வீதி - பெரிய தெரு முனையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. துவக்கமாக தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து நடிகர் பாக்யராஜ் உரையாற்றினார்.
ஆளும் தி.மு.க. அரசு கடந்த ஐந்தாண்டுகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை, ஒரு ரூபாய்க்கு அரிசி உள்ளிட்ட பல சலுகைத் திட்டங்களையும், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு, இலவச வண்ணத் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு இலவச திட்டங்களையும் செய்துகாட்டியுள்ளது என்றும்,
தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கையை நகலெடுத்தாற்போல் வெளியிடப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பொருளற்றது... புதிதாக எதையும் செய்யத் தெரியாதவர்கள்... கலைஞர் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே சிந்திப்பதால் அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்... ஆனால் அதிமுக கூட்டணியோ மக்களைப் பற்றி கவலையற்றவர்களாக இருப்பதால் சுயமாக எதையும் மக்களுக்காக சிந்தித்து செய்யவியலவில்லை என்று பாக்யராஜ் தனதுரையில் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் தன்னை “குடிகாரன்” என்று விமர்சித்த ஜெயலலிதாவை பதிலுக்கு கடுமையாக விமர்சித்தார் நடிகர் விஜயகாந்த்... நான் மக்களோடுதான் கூட்டணி என்றார்... பின்னர் ஆண்டவனோடுதான் கூட்டணி என்றார்... இப்போது அவர் என்ன கூட்டணி என்பதை நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கலைஞரை மரியாதையுடன் பாராட்டி பல மேடைகளில் பேசிய விஜயகாந்த், தனிக்கட்சி துவங்கியவுடன் தனது நிலையை மாற்றிக்கொண்டு, மிகவும் அநாகரிகமாக பேசி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் நலனுக்கான கூட்டணி என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத சுயநலக் கூட்டணி என்றும் தெரிவித்த அவர், நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்களிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் தி.மு.க. நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், வார்டு செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான மும்பை முகைதீன் மற்றும் ஒன்றிய - நகர நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|