குடியிருப்புகள் குறித்து மூன்று பிரச்சனைகள் பிரதானமாகக் கூறப்படுகின்றன.
(1) நில ஆர்ஜிதத்தில் முறைக்கேடு
(2) நகராட்சி ஒப்புதல் பெறப்படவில்லை
(3) CRZ விதிமுறைகள் மீறல்
அவற்றில் முதல் பிரச்சனை (நில ஆர்ஜிதம்) திருச்செந்தூர் நீதிமன்றத்தில் தனி வழக்காக நிலுவையில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரச்சனைகள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
நில ஆர்ஜித விஷயம் என்னவெனில், அரசுக்கு விற்கப்பட்ட நிலத்திற்கு இருவர் உரிமை கொண்டாடுவதாக தெரிகிறது. மேலும் இதில் உரிமை கொண்டாடும் ஒருவரின் வாரிசுகள் 11 பேரில் 8 பேர் அரசுக்கு நிலத்தினை - Power of Attorney மூலம் விற்றதாக கூறப்படுகிறது. மற்றொருவர், இந்நிலம் தங்களுக்கு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் விற்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார். மிகவும் சிக்கல் நிறைந்த இந்தப் பிரச்சனை நீதிமன்றத்தில் நிறைவு பெற பல மாதங்கள் ஆகலாம். இருப்பினும் அப்பிரச்சனை முடியும் வரை இக்குடியிருப்பு திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புகள் மிகக் குறைவு.
தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள இரண்டு பிரச்சனைகளில் ஒன்று நகராட்சி ஒப்புதல் பெறவில்லை என்பது. இதில் அரசு தரப்பு இத்திட்டத்திற்கு நகராட்சி ஒப்புதல் தேவையில்லை என வாதிடுவதாக தெரிகிறது.
காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தகவல் அலுவலர் - DTCP ஒப்புதல் - அவசியப்பட்டால் CRZ ஒப்புதல் மட்டும் பெறவேண்டி உள்ளது என கூறியுள்ளார்.
தூத்துக்குடி நீதி மன்ற தீர்ப்புப்படி குடியிருப்பு கட்டுமானங்களுக்கு நகராட்சி ஒப்புதலும் பெறப்படவேண்டும் என வந்தால், நீதி மன்றம் அரசினை நகராட்சி ஒப்புதல் பெற (கால தாமதம் ஆகியிருந்தாலும்) அணுகும்படி கூறலாம். ஆனால் ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்தைக்கொண்டு இத்திட்டத்தினை முற்றிலும் தடைசெய்ய வாய்ப்புகள் குறைவு. அவ்வாறு நகராட்சியினை அரசு அணுகும் போது நகராட்சி ஒப்புதல் அளிக்க
மறுக்க தகுந்த காரணங்கள் தேவைப்படும்.
இத்திட்டம் தேவையில்லை என்ற நகராட்சியின் தீர்மானம் போதுமானதாக இருக்காது. ஏன் எனில் தற்போதைய நகராட்சியின் ஆரம்ப காலத்தில் இத்திட்டத்திற்கான பயனாளிகளை நகராட்சி அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மீதியுள்ள காரணம் CRZ விதிமீறல். முன்னரே நாம் கண்டப்படி இக்குடியிருப்பு குறித்த CRZ ஒப்புதல் இதுவரை அரசு தரப்பில் பெறப்படவில்லை. மேலும் CRZ விதிமுறைகள் - 1991க்கு எதிராகவே கட்டுமானங்கள் அமைந்துள்ளன. இக்குடியிருப்புக்கான திட்ட ஒதிக்கீடு 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். இத்தொகை திட்டங்களுக்கு மத்திய அரசாங்க சுற்றுப்புற சூழல் அமைச்சக ஒப்புதலும் பெறவேண்டும். அதுவும் இதுவரை பெறப்படவில்லை.
CRZ விதிமீறல்களை காரணம்காட்டி இத்திட்டத்தினை முழுமையாக நீதிமன்றம் தடைசெய்ய வாய்ப்பு உண்டா? இதுகுறித்த தீர்ப்பு இருவகையாக வரலாம். ஒன்று, விதிமீறி கட்டப்படும் சுமார் 50 மீட்டர் இடத்தினை விட்டு - உள்வாங்கி குடியிருப்புகளை கட்ட உத்தரவு பிறப்பிக்கலாம். அல்லது மும்பையில் சமீபத்தில் CRZ வீதிமீறல் காரணமாக முழுவதுமாக இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு அடுக்குமாடி உதாரணமாக எடுக்கப்பட்டு கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை) திட்டம் முழுவதும் நிறுத்தப்படலாம்.
இருப்பினும் வெற்றிப்பெற அதிக வாய்ப்புள்ள CRZ விதிமீறல்களை பிரதானப்படுத்தி வழக்கினை நடத்த தயக்கம் காட்டப்படுவதாக தெரிகிறது. பிப்ரவரி 09 அன்று நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் பேசிய சிலர் CRZ விதிமீறல்களை முன்னிருத்தினால் காயல்பட்டின நகரவாசிகளுக்கு பிற்காலங்களில் சிரமம் ஏற்படலாம் எனக்கூறியுள்ளனர். இது முற்றிலும் தவறான வாதமாகும்.
இதனால் கடலோரமாக (கடலிலிருந்து 200 மீட்டர் வரை) நிலம் வைத்துள்ள சிலர் பாதிக்கப்படலாம். காயல்பட்டினத்தை பொறுத்த வரை அநேகமாக அனைத்து குடியிருப்புகளும் 200 மீட்டரினை தாண்டியே உள்ளது. CRZ விதிமுறைகள் இந்தியா முழுவதும் அமலில் உள்ள சட்டம் ஆகும். இதில் காயல்பட்டினத்திற்கு என விதிவிலக்குகள் கிடையாது. எனவே இக்குடியிருப்புகள் குறித்த நகர நிலைப்பாடுக்கும், இவ்விதிமுறைக்கும் எந்த தொடர்பும் ஏற்படுத்த அவசியம் இருப்பதாக தெரியவில்லை.
ஆகவே CRZ விதிமுறை மீறல்களை சரியான முறையில் முன்னிறுத்தினால் இக்குடியிருப்பு கட்டுமானங்களை முழுமையாக நிறுத்த வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross