வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காயல்பட்டினத்தை உள்ளடக்கிய திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, நகர்நலன் கருதி காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பேரன்புடையீர்,
முக்கியம், தமிழக சட்டமன்றத் தேர்தல் சிறப்பாக நிறைவேறுவதுடன், நல்லாட்சி மலர்ந்து, ஜனநாகயம் நிலைபெற வாழ்த்துகிறோம்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களே! எமதூரில் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை தங்களின் கவனத்திற்கு முன்வைக்கிறோம்...
(01) எமதூரில் மின்சாரி வாரிய அலுவலகத்திற்கு சொந்தக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும்.
(02) எமதூரில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) அலுவலகம் புதுப்பித்துக் கட்டப்பட வேண்டும்.
(03) மழைநீர் தேங்கும் இடங்களில் மட்டும் மழைநீர் வடிகால் கட்டப்பட வேண்டும். (பாதாள சாக்கடை அல்ல!)
(04) விரைவில் நிறைவேற உள்ளதாக வாக்களிக்கப்பட்ட தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே குறுக்குச் சாலைத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
(05) பேருந்து நிலைய முகப்பில் அதிக மின்விளக்குகள், இராட்சத மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட வேண்டும்.
(06) எமதூரில் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளவர்கள் கணக்கெடுக்கப்பட வேண்டும்.
(07) ஒருவழிப்பாதை அமைத்து, நகரின் பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வேண்டும்.
(08) மின்தடை இல்லாத நிலையை ஏற்படுத்தும் பொருட்டு, நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பையைக் கொண்டு மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து, நகரின் மின் வினியோகத்தை சீர்படுத்த வேண்டும்.
(09) மாணவர்களின் கல்வித்திறன் வளர்க்க அரசு பாலிடெக்னிக் (அல்லது) பொறியியல் கல்லூரியை எமதூரில் அரசு அமைக்க வேண்டும்.
(10) ஏழை-எளியவர்கள் பயனடையும் பொருட்டு எமதூரின் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் அமைத்துத் தருவதுடன், பழுதடைந்துள்ள வாவு அறுவை சிகிச்சை அரங்கத்தை புனர்நிர்மாணம் செய்ய வேண்டும். அத்துடன், அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவ நிபுணர் இம்மருத்துவமனையில் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.
(11) இந்நகரின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் அத்துமீறி எமதூரின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் குடியேற்றவாசிகளை அனுமதிக்கக் கூடாது. (ஓட்டுக்காகவும், அரசியலுக்காகவும் ஆக்கிரமிப்பை ஆதரிக்காமல் தவிர்க்க வேண்டும்.)
அனைத்துக் கட்சித் தொண்டர்களும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் நேரங்களில் இணக்கமுடனும், காயல்பட்டினத்தின் கண்ணியத்திற்கு குறை ஏற்பாடமலும் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஜனநாயக மக்களாட்சியால் நம் இந்திய தேசம் உலகில் அனைத்துத் துறைகளிலும் முதன்மை பெற, வளர்ச்சியடைய வாக்களிப்போம். (வாக்களிப்பதை கடமையெனக் கருதுவோம்.)
இவ்வாறு இளைஞர் ஐக்கிய முன்னணி நிர்வாகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 22.03.2011 அன்று காயல்பட்டினத்திலுள்ள பொதுநல அமைப்புகளிடம் ஆதரவு கோரி வந்த தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம் இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் இவ்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. |