தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளுக்கு அருகில் வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிகளால் தேர்தல் அலுவலகம் அமைக்கப்படுவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு:-
(1) வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டருக்குள் தேர்தல் அலுவலகம் வேட்பாளராலோ, அரசியல் கட்சிகளாலோ அமைக்கப்படக் கூடாது.
(2) வாக்குச் சாவடி அமைவிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் இருப்பினும், வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சிகளோ ஒரேயொரு தேர்தல் அலுவலகம் மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் தேர்தல் அலுவலகத்தில் ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள் மற்றும் வெயில் போன்ற இயற்கை இடர்பாடுகளைத் தவிர்ப்பதற்காக ஒரு குடை அல்லது துணியால் தார்பாலின் கூரை அவ்விருவரையும் பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்படலாம்.
(3) அவ்வாறு அமைக்கப்படும் தேர்தல் அலுவலகம் tent மூலமாகவோ அல்லது கொட்டகை மூலம் மூடப்பட்டதாகவோ இருக்கக் கூடாது.
(4) அவ்வாறு தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கு முன்பு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குச்சாவடி எண், வார்டு எண் மற்றும் பெயருடன் எந்த இடத்தில் அமைக்கப்படவுள்ளது ஆகிய விபரங்களுடன் முன் அனுமதி பெற்று அமைக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி தவிர, உள்ளாட்சித்துறை அதிகாரிகள், மாநகராட்சி, நகராட்சி, மாவட்டப் பஞ்சாயத்து, நகர்ப்புற கமிட்டி, ஊராட்சி ஆகியோரிடம் அனுமதி கோரலாம். அவர்கள் ஊராட்சித் துறை நிர்வாகத்தின் கீழுள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அனுமதி வழங்கலாம்.
அவ்வாறு பெறப்பட்ட அனுமதி வாக்குச்சாவடியில் பணிபுரியும் நபர்களிடம் இருக்க வேண்டும். அவ்வப்போது காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலர்களால் கேட்கப்படும்போது காண்பிக்கப்பட வேண்டும்.
மேற்படி தேர்தல் அலுவலகத்தை வாக்காளர்களுக்கு அடையாளச் சீட்டு வழங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அடையாளச் சீட்டுகளில் வேட்பாளரின் பெயரோ, சின்னமோ, கட்சியின் பெயரோ இருக்கக் கூடாது.
ஒரேயொரு பெயர் பதாதகை இருக்கலாம். அதில் வேட்பாளர் பெயர், அவர்களின் கட்சி, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் சின்னம் இடம்பெறலாம். அந்த பெயர் பதாதகை 3 x 4 அடி நீள அகலம் இருக்கலாம். அவ்வாறு அமைக்கப்படும் பெயர் பதாதகைகள் பெரியதாக இருந்தால் தேர்தல் அலுவலர்களால் அகற்றப்படும்.
வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தில் கூட்டங்கள் கூடாத வண்ணம் இவ்விருவரும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே வாக்கு அளித்தவர்கள் எவரும் தேர்தல் அலுவலகத்தில் இருக்கக் கூடாது. ஏற்கனவே வாக்கு அளித்தவர்களின் அழியா மை இருப்பதை வைத்து அடையாளம் காணப்படும்.
(5) வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் பொதும்க்கள் ஓட்டுப்போடுவதற்கு செல்லும்போது அடையாளமோ, சைகையோ செய்யக்கூடாது. மற்ற வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்து செல்வதை எவரும் தடுக்கக் கூடாது. வாக்குச்சாவடியில் அமர்ந்துள்ள நபர்கள் எவ்விதத்திலும் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க சைகை மூலமோ, அடையாளங்கள் மூலமோ வற்புறுத்தக் கூடாது. தங்களுக்கோ, பிற வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கக் கோரக்கூடாது.
இவ்விதிமுறைகளை மீறி செயல்படும் அலுவலர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கை வேட்பாளர் மீதோ, அவரது முகவர் மீதோ அல்லது தொண்டர்கள் மீதோ, யார் யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
(6) தேர்தல் நாள் முதல் வாக்கு எண்ணப்படும் நாள் வரை வாக்குச் சாவடிகளிலோ அல்லது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திலோ வேட்பாளரின் தேர்தல் அலுவலர்கள் (தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தவிர) எவரும் கைபேசியோ, கார்டுலெஸ் ஃபோன்களோ, வயர்லெஸ் ஃபோன்களோ 100 மீட்டருக்குள் மற்றும் வாக்குச் சாவடிக்குள் பயன்படுத்தக் கூடாது.
(7) வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கும்போது, அவை அரசு பொது இடங்களிலோ, தனியார் இடங்களிலோ ஆக்கிரமிப்பு செய்து அமைக்கக் கூடாது. மற்றும் பள்ளிக்கூடங்கள், மத நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அருகில் வேட்பாளர் தேர்தல் அலுவலகம் அமைக்கக் கூடாது.
இவ்வாறு வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சிகள் அமைக்கும் தேர்தல் அலுவலகம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. |