காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில், நகரின் நலிவுற்ற 30 குடும்பத்தினருக்கு சமையல் பொருட்கள் வழங்கவும், 25 மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கவும், 50 மாணவ-மாணவியருக்கு பள்ளிச்சீருடைகளும், 50 மாணவ-மாணவியருக்கு பாடக்குறிப்பேடுகள் வழங்கவும் அதன் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் செயற்குழுக் கூட்டம், சதுக்கைத் தெருவிலுள்ள அதன் அலுவலகத்தில் 22.03.2011 (நேற்று) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அதன் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். செயலாளர் டூட்டி சுஹரவர்த்தி வரவேற்றுப் பேசினார்.
பைத்துல்மால் அறக்கட்டளையின் வரவு-செலவு கணக்கறிக்கையை அதன் பொருளாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
அறக்கட்டளை பொருளாளரால் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறக்கட்டளையின் வரவு-செலவு கணக்கறிக்கையை கூட்டம் ஒருமனதாக அங்கீகரித்தது.
தீர்மானம் 2 - நலிவுற்ற குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்:
நகரில் நலிவுற்றுள்ள 30 ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ஐநூறு ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை ஓராண்டிற்கு வழங்குவதற்காக மொத்தம் ஜகாத் நிதியிலிருந்து ஒரு லட்சத்து என்பதினாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தீர்மானம் 3 - கல்வி உதவித்தொகை:
தொழில்முறைக் கல்வி (Professional course) பயிலும் 25 மாணவர்களுக்கு ஜகாத் நிதியிலிருந்து மாதம் என்னூறு ரூபாய் வீதம் ஓராண்டுக்கு (10 மாதங்களுக்கு) இரண்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானம் 4 - ஜகாத் நிதி வகைப்படுத்தல்:
மேற்கூறப்பட்ட கல்வி உதவித்தொகை, நலிவுற்ற குடும்பங்களுக்கான மளிகைப் பொருட்களுதவிக்காக ஒதுக்கீடு செய்தது போக எஞ்சிய ஜகாத் தொகையிலிருந்து 75 சதவிகிதம் மருத்துவ உதவிக்காகவும், மீதி 25 சதவிகிதம் கடன், வறுமை உள்ளிட்ட குடும்பச் சிரமங்களைப் போக்குவதற்காகவும் செலவிடுவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - இக்ராஃ மூலம் பள்ளிச்சீருடை-பாடக்குறிப்பேடுகள் உதவி:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் பள்ளிச்சீருடை-பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தின் கீழ் நகரின் தலா 50 ஏழை மாணவ-மாணவியருக்கு பள்ளிச் சீருடைகளும், பாடக் குறிப்பேடுகளும் வழங்குவதற்காக முப்பத்து ஐந்தாயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக, அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஜெஸ்மின் கலீல் நன்றி கூற, ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் இதர ஒருங்கிணைப்பாளர்களான ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர், ஹாஜி எம்.ஏ.ஜெய்னுல் குத்புத்தீன், மேலாளர் ரஃபீக் அஹ்மத் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வேண்டுகோள்!
கூட்டம் நிறைவுற்ற பின், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகிகள் நகர மக்களுக்கு ஒரு வேண்டுகோளை பின்வருமாறு முன்வைத்துள்ளனர்:-
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அடிப்படை வருமானம் வீட்டுச் சந்தா மூலமே பெறப்படுகிறது. நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் தந்துதவும் சிறு தொகைகளை அடிப்படையாகக் கொண்டே இத்தனை பணிகளும் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களுக்கு கடனுதவியாக மட்டும் ஒரு வாரத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வாரந்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இச்செய்தியைப் பார்க்கும் நம் நகரின் பொதுமக்களில் இதுவரை வீட்டுச் சந்தா திட்டத்தில் இணையாதோர், ஏழைகளின் துயர் துடைக்கும் இப்புனிதப் பணியின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு விரைந்து இணையுமாறும், வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் காயலர்கள் தம் குடும்பத்தினரை இதில் இணையச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன், பொதுமக்கள் தங்களது ஜகாத், ஸதக்கா பொருட்களை நமது காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளைக்கு ஆர்வத்துடன் தந்துதவுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். |