நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளராப் போட்டியடும் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று காயல்பட்டினத்தில் பொதுநல அமைப்புகளின் அலுவலகங்களுக்குச் சென்று ஆதரவு கோரினார்.
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC), ஸாஹிப் அப்பா தைக்கா ஆகிய இடங்களுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு கோரினார். ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், அங்கு குழுமியிருந்த மக்களிடம் ஆதரவு கேட்டார். அவ்வமயம், பொதுமக்கள் சார்பாக பேராசிரியர் சதக்கு தம்பி சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
இளைஞர் ஐக்கிய முன்னணியில், அதன் செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நகர்நலனைக் கருத்தில் கொண்டு சில கோரிக்கைகளை முன்வைத்தார். ரெட் ஸ்டார் சங்கத்தில், அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார். சங்க நிர்வாகத்தின் சார்பில் அவரிடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காயல்பட்டினம் நகர கவுரவ தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் இல்லம் சென்ற அனிதா, அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, ஆதரவு கோரினார்.
அவருடன் தி.மு.க. நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் மற்றும் அக்கட்சியினர் சென்றிருந்தனர். வேட்பாளர் செல்லுமிடங்களிலெல்லாம் அக்கட்சியினரின் சார்பில் பட்டாசு வெடித்து வரவேற்பளிக்கப்பட்டது.
படங்கள்:
M.M.ஷாஹுல் ஹமீத்,
மரைக்கார் பள்ளித் தெரு, காயல்பட்டினம்.
செய்தியில் சில வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. |