உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர நிர்வாகச் செலவுக்கான தொகை அதிகரித்தும், காயல்பட்டினத்திலுள்ள 39 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி வழங்குவதென்றும் சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நடப்பு பருவத்திற்கான கடைசி செயற்குழுக் கூட்டம் 21.03.2011 அன்று இரவு 08.30 மணிக்கு மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது. ஹாஜி கானி மிஸ்கீன் ஸாஹிப் தலைமை தாங்கினார். ஸூஃபீ ஷேக் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கிவைத்தார்.
தேர்வு செய்யப்பட்ட மனுக்களுக்கு நிதியொதுக்கீடு:
பல்வேறு தேவைகளுக்காக உதவிகோரி பெறப்பட்ட மனுக்களில் கடந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மனுக்களுக்கு இக்கூட்டத்தின்போது உதவித்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அவற்றை, இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் பயனாளிகளுக்கு வினியோகிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், இதுகாலம் வரை குறித்த காலத்தில் இதுபோன்ற உதவித்தொகைகளை மன்றத்தின் சார்பில் வினியோகித்து உதவிய இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதுக்கு கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
இக்ராஃவை அனைத்துத் துறைகளுக்கும் கூட்டமைப்பாக்குதல்:
கல்வி மட்டுமின்றி மருத்துவம், சிறுதொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் இக்ராஃவை கூட்டமைப்பாகச் செயல்படச் செய்வது குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஏற்கனவே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், இதுகுறித்த அனைத்துலக காயல் நல மன்றங்களின் கருத்துக்களை அறிந்த பின்னர், அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
மன்றத்தின் கணக்குத் தணிக்கை:
மன்றத்தின் வரவு-செலவு கணக்கு விபரங்கள் குறித்து கணக்குத் தணிக்கையாளர் முஹம்மத் அலீயுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, சந்தேகங்களுக்கு விளக்கம் பெறப்பட்டதுடன், தணிக்கை அறிக்கைக்கான கணக்குகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
வருடாந்திர பொதுக்குழுக் கூட்ட ஏற்பாட்டுப் பொறுப்புகள் பகிர்ந்தளிப்பு:
போக்குவரத்து ஏற்பாடுகள்:
எதிர்வரும் 26.03.2011 அன்று நடைபெறவுள்ள மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. உறுப்பினர்களை பொதுக்குழு நடைபெறுமிடத்திற்கு ஒருங்கிணைத்து அழைத்து வரும் பொறுப்பு ஏ.எம்.உதுமான் வசம் ஒப்படைக்கப்பட்டது.
உணவு ஆயத்தப் பணிகள்:
உணவு தயாரிப்பதற்கான பொறுப்பு ஹரீஸ், பாக்கர் ஸாஹிப் ஆகிய உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகள்:
பொதுக்குழுவின்போது நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகளையும் அதனையொட்டிய இதர ஏற்பாடுகளையும் செய்யும் பொறுப்பு மன்றத்தின் துணைச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வசம் ஒப்படைக்கப்பட்டது.
வினாடி-வினா மற்றும் மகளிருக்கான சமையல் போட்டிகள்:
வினாடி-வினா போட்டி மற்றும் பெண்களுக்கான சமையல் போட்டி ஆகியவற்றையும் பொதுக்குழுவின்போது நடத்தலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்திலேயே பொதுக்குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரித்து முடிவெடுக்கப்பட்டது. பொதுக்குழு நிகழ்விடத்திற்கு வாகன ஏற்பாடுகளை செய்வதற்காக சம்பந்தப்பட்ட துறையை அணுகுவதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்:
பொதுக்குழுக் கூட்டத்திற்காக செய்யப்படும் அனைத்து ஏற்பாடுகளுக்கும் உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மன்றத் தலைவர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூட்டத்திற்கு வருவதன் நன்மைகள்:
வருடத்தில் நான்கு முறை உறுப்பினர்கள் இதுபோன்று மன்றக் கூட்டங்களில் தம் குடும்பத்தினருடன் கலந்துகொள்வதால், அவர்களுக்கிடையில் மனமாச்சரியங்கள் அகற்றப்பட்டு, ஒற்றுமை வலுப்பெறும் எனவும், இவ்வாறு கூடுவது ஒருபோதும் நேர வீணடிப்பாகாது எனவும், கூட்டம் கூட்டப்படும் நமது நோக்கம் குறித்து வல்ல இறைவன் அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருக்கிறான் என்றும், நம் நோக்கம் நன்றாக இருக்கும்பட்சத்தில், அதற்கான நற்கூலிகளை அவன் நிறைவாகத் தருவான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுகாலம் வரை மன்றக் கூட்டங்களில் உறுப்பினர்கள் தமது குடும்பத்தினருடன் கலந்துகொண்டது மிகுந்த ஊக்கமளிப்பதாகவும், இதற்காக அரும்பாடுபட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த நன்றிக்குரியவர்கள் என்றும், இனி வருங்காலங்களிலும் இதுபோன்ற நிலையை வரவிருக்கும் புதிய பொறுப்பாளர்கள் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய இலச்சினை:
மன்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய இலச்சினையை மன்றத் தலைவர் இக்கூட்டத்தில் வெளியிட்டு விளக்கிப் பேசினார். இதனை தயாரிப்பதற்காக மிகுந்த சிரமமும், கடின உழைப்பும் மேற்கொண்ட காயல் ஹுஸைன் நூருத்தீன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீகாந்துக்கு மன்றம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரவித்துக்கொள்வதாக தெரிவித்த அவர், இலச்சினை குறித்த இதர அம்சங்கள், வருடாந்திர பொதுக்குழுவின்போது விளக்கப்படும் என்றார்.
இக்ராஃவின் வருடாந்திர செலவுத்தொகை அதிகரிப்பு:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூபாய் 20,000 என்று ஒதுக்கப்பட்டிருந்த தொகையை அதிகரித்து, இனி வரும் ஆண்டிலிருந்து ரூபாய் 25,000 தொகை வழங்குவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எளியோருக்கு சமையல் பொருட்களுதவி:
வரும் 27.03.2011 அன்று, காயல்பட்டினம் நகரிலுள்ள ஏழை - எளிய - ஆதரவற்ற 39 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி வழங்குவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த உதவித்திட்டம் வரும் ரமழான் மாதத்திற்கு முன்னர் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையில், ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அனைவருக்கும் இரவு உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. இரவு 09.30 மணிக்கு கூட்டத்தினர் கலைந்து சென்றனர். கலந்துகொண்ட அனைவருக்கும் மன்றத் தலைவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தகவல்:
ரஷீத் ஜமான்,
செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |