தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெனிபர் சந்திரன் திடீரென மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சாயர்புரத்தைச் சேர்ந்த ஏ.பால் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கடந்த 16ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளை அதிமுக போட்டியிடுவதாக கூறி தேமுதிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், கூட்டணி கட்சிகளுக்கு உரிய தொகுதிகளை ஒதுக்குவதாக அறிவித்தார். இந்நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா நேற்று மதியம் அறிவித்தார்.
இதில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஜெனிபர் சந்திரன் திடீரென மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சாயர்புரத்தைச் சேர்ந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஏ.பால் என்பவர் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏ.பால் (வயது 44), அப்பா பெயர் -அதிசயமணி நாடார். தொழில்- காண்ட்ராக்டர். 1989ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் 1972ல் எம்ஜிஆர் அதிமுக கட்சி துவக்கியபோது தூத்துக்குடியில் முதல் அதிமுக அமைப்பாளராக பணியாற்றிய குரூஸ் மாணிக்கம் என்பரின் மருமகன் ஆவார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக எஸ்.பி.சண்முக நாதன், கோவில்பட்டி வேட்பாளர் கடம்பூர் ராஜ், திருச்செந்தூர் வேட்பாளர் மனோகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஓட்டப்பிடாம் தொகுதி புதிய தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதால் அங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சின்னத்துரை விலக்கி கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
www.tutyonline.net
|