காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்திடுவதற்காக சஊதி அரபிய்யா ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் “புற்றுக்கு வைப்போம் முற்று!” என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு, 13.03.2011 அன்று காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் குறுந்தகடுகள் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆவணப்படத்திற்கான செலவுத்தொகை போக எஞ்சிய தொகையையும்,
ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது, புற்றுநோயாளிகளுக்கு மருத்துவ நிதியுதவி கோரி ஜலாலிய்யா அரங்கில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் மூலம் பெறப்பட்ட தொகையையும் இணைத்து, மொத்தத்தில் ரூபாய் ஐம்பதாயிரம் தொகை இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையை, நகரின் அனைத்து சமுதாயங்களைச் சார்ந்த - அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பத்து புற்றுநோயாளிகளின் மருத்துவ செலவினங்களுக்காக தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான சிறியதொரு நிகழ்ச்சி 20.03.2011 (நேற்று) மாலை 05.30 மணிக்கு காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்ற இவ்வெளிய நிகழ்ச்சியில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ நோயாளிகளுக்கு ஆறுதலும் மனவலிமையும் ஊட்டும் வகையில் சில நிமிடங்கள் உரையாற்றினார்.
பின்னர், முதற்கட்டமாக ஏழு புற்றுநோயாளிகளுக்கு மருத்துவ நிதியுதவியாக தலா ஐந்தாயிரம் ரூபாய் மறைவிடத்தில் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஹாஜி எஸ்.ஐ.புகாரீ ஆகியோர் வழங்கினர்.
இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான், அதன் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்க உறுப்பினர் எம்.டி.முஹம்மத் அலீ, அமீரக காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் கனீ முஹம்மத் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியின்போது சமூகமளித்திருந்தனர். |