காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரில் புதிதாக கட்டப்பட்டு அண்மையில் திறப்பு விழா கண்டது பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளிவாசல்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும், மஹான் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டும் சிறப்பு மவ்லித், திக்ர் மஜ்லிஸ் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 20.03.2011 (நேற்று) மாலையில் நடைபெற்றது.
நேற்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின்னர் சுப்ஹான் மவ்லித் மற்றும் முஹ்யித்தீன் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார்.
மவ்லித் மஜ்லிஸைத் தொடர்ந்து இறைப்புகழ், இறை நல்லடியார்கள் புகழ்பாடும் நஅத் மஜ்லிஸ் நடைபெற்றது. ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் குழுவிலுள்ள சிறுவர்கள் தஃப்ஸ் முழக்கத்துடன் இந்த நஅத் மஜ்லிஸை அரங்கேற்றினர்.
மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ், காதிரிய்யா தரீக்காவின் கலீஃபா மவ்லவீ எல்.ஓ.எம்.முஹம்மத் அலீ மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது.
இஷா தொழுகைக்குப் பின் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சிகளில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், துணைத்தலைவர் ஹாஜி அபூதல்ஹா, செயலாளர் ஹாஜி ஜெஸ்மின் கலீல், துணைச் செயலாளர் ஜுவல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர். |