நகரில் உள்ள மொபைல் கோபுரங்கள் பல விதமான பகுதிகளிலும், பல விதமான கட்டிடங்களிலும், நிலங்களிலும் எழுப்பப்பட்டுள்ளன.
நகரில் 7 மொபைல் நிறுவனங்களின் கோபுரங்கள் - நிறுவனம் ஒன்றுக்கு சராசரியாக தலா மூன்று கோபுரங்கள் என நிறுவப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக Airtel நிறுவனம் 5 மொபைல் கோபுரங்களை நகரில் நிறுவி உள்ளது. பரப்பளவில் சுமார் 12.5 சதுர கிலோமீட்டர் உள்ள நகருக்கு இது அதிகமா அல்லது சரியான அளவுதானா என அறியப்படவேண்டும்.
மேலும் நகரின் நான்கு கட்டிடங்கள் - குறைந்தது மூன்று மொபைல் கோபுரங்களை தாங்கி உள்ளன.
வண்ணக்குடி தெருவில் உள்ள முர்ஷிதா கட்டிடத்தில் 3 மொபைல் கோபுரங்களும் (Airtel, Idea, Tata), ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் 3 மொபைல் கோபுரங்களும் (BSNL, Airtel, Tata), தைக்கா தெரு நூர் மன்ஜிலில் 3 மொபைல் கோபுரங்களும் (Airtel, Idea, Tata), கூலக்கடை பஜாரில் உள்ள கட்டிடம் ஒன்றில் 3 கோபுரங்களும் (BSNL, Reliance - 2) நிறுவப்பட்டுள்ளன.
இது தவிர நகரில் உள்ள மொபைல் கோபுரங்கள் குறித்த பல தகவல்கள் (கதிர் வீச்சு அளவு போன்றவை) தகவல் அறியும் சட்டம் மூலம் காயல்பட்டணம்.காம் பெற்றுள்ளது. இவைகள் இத்துறை வல்லுநர் பார்வைக்கு அனுப்பப்பட்டு கருத்துக்கள் விரைவில் பெறப்படும்.
மொபைல் கோபுரங்கள் மற்றும் மொபைல் தொலைபேசிகளில் உள்ள ஆபத்துகள் குறித்து வல்லுனர்கள் மத்தியில் தெளிவான நிலை இதுவரை இல்லை. இருப்பினும் ஆபத்து உள்ளது என கூறும் விஞ்ஞானிகளும் அவர்கள் துறையில் வல்லுனர்கள் என்பதால் மொபைல் கோபுரங்கள் மற்றும் தொலைபேசிகள் விசயத்தில் பாதுகாப்பாக நடந்து கொள்வது சிறந்தது. நகருக்கு எத்தனை மொபைல் கோபுரங்கள் போதுமானது என்பதில் ஒருமித்த கருத்தினை உருவாக்கி, புதிதாக மொபைல் கோபுரங்களை நிறுவுவதற்கு முன்னர் துறை வல்லுனர்களிடம் கருத்து பெறுவது அவசியமாகும்.
மேலும் மொபைல் தொலைபேசிகள் உபயோகிக்கும் விசயத்தில் - அதனை தினமும் பயன்படுத்தும் நேரம், இல்லத்திலோ அல்லது அலுவலகங்களிலோ இருக்கும்போது மொபைல் தொலைபேசியை தவிர்ப்பது போன்ற அம்சங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கியமாகும்.
|