70 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் குலுக்கல் முறையின்றி ஹஜ் புனிதப் பயணம் செய்ய இனி அனுமதிக்கப்படுவர் என்றும், அவருடன் துணைக்கு ஒருவரும் செல்லலாம் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார்.
ஹஜ் பயணம் தொடர்பாக கடந்த 07.03.2011 அன்று புதுடெல்லியில் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் கூட்டத்தை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூட்டியிருந்தார். அதில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மத், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி.முஹம்மத் பஷீர், எம்.அப்துர்ரஹ்மான் உட்பட 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சஊதி அரபிய்யாவிற்கான இந்திய தூதர் தல்வீஸ் அஹ்மத் உள்ளிட்ட வெளியுறவுத்துறையின் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில் எடுகுகப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஹஜ் பயணம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
(1) 70 வயதும், அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள முஸ்லிம்களும் இனிமேல் ஹஜ் புனிதப் பயணம் முற்கொள்ள அவர்கள் குலுக்கல் முறையில் (குர்ரா) தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க தேவையில்லை.
அவர்குள் அந்த ஆண்டில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்குத் துணையாக ஒரு நபர் உடன் செல்வதற்கும் அனுமதிக்கப்படும்.
(2) கடந்த ஆண்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் அடுத்த ஆண்டு தானாகவே பயணிகள் பட்டியலில் இடம் பெறுவர்.
(3) தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பப் பட்டியல் படி ஹஜ் பயணிகளை அனுப்பும் முறை ரத்து செய்யப்படும்.
(4) அதற்குப் பகரமாக, கேந்த்ரிய வித்யாலயாவிற்கு ஒதுக்கீடு செய்வது போல ஹஜ் பயணத்திற்கும் ஒவ்வொரு எம்.பி.க்கும் 2 இடங்கள் ஒதுக்கப்படும்.
(5) ஹஜ் பயணத்திற்கு நல்லெண்ண தூதுக்குழு எம்.பி.க்கள் குழு பற்றி மறு பரிசீலனை செய்யப்படும். இனிமேல் அந்தக் குழுவில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 3 முஸ்லிம் எம்.பி.க்கள் இடம்பெறுவர். அவர்களோடு 3 முஸ்லிம் அறிஞர்கள், 3 முல்லாக்கள் மற்றும் ஒரு பிராந்திய ஹஜ் கமிட்டி பிரதிநிதி சேர்க்கப்படுவர்.
(6) தற்போது சஊதி அரசாங்கம் இந்தியாவுக்கு அனுமதித்திருக்கும் பயணிகள் கோட்டா எண்ணிக்கையை மேலும் 6,000 அதிகரிக்க சஊதி அரசைக் கேட்டுக்கொள்வது.
(7) சஊதி அரபிய்யாவில் இந்திய ஹஜ் பயணிகள் தங்குவதற்கு செய்யப்படும் ஏற்பாடுகளை வெளிப்படையாக்குவது.
(8) கட்டிடக் குழுவில் மக்களவையைச் சேர்ந்த 2 எம்.பி.க்களும், மாநிலங்களவையைச் சேர்ந்த 2 எம்.பி.க்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசுக்கும், சஊதி அரசுக்கும் ஹஜ் பயணம் தொடர்பாக தற்சமயம் நடைமுறையில் உள்ள ஒப்பந்தப்படி 2010ஆம் ஆண்டு 1 லட்சத்து 64 ஆயிரம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் 48 ஆயிரத்து 37 பேர் தனியார் முகவர்கள் மூலம் அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் ஹஜ் கமிட்டி மூலம் அனுப்பப்பட்டனர்.
நன்றி:
மணிச்சுடர் நாளிதழ் |