ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், அங்கு வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் முதலாமாண்டு நிறைவு மற்றும் நடப்பாண்டிற்கான பொதுக்குழுக் கூட்டம் 08.05.2011 அன்று, ஹாஜி ஜஹாங்கீர் இல்லத்தில், ஹாஜி முஸ்தஃபா கமால் தலைமையிலும், டி.எம்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் முன்னிலையிலும் நடைபெற்றது.
ஹாஃபிழ் நூஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதாஹிர் ஆண்டறிக்கை வாசித்தார். பின்னர், நகர்நலப் பணிகள் குறித்த உறுப்பினர்களின் நீண்ட நேர கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
2011 மார்ச் 31ஆம் தேதி முடியவுள்ள மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கிறது.
தீர்மானம் 2 - பள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடு இலவச வினியோகம்:
காயல்பட்டினம் நகரின் ஏழை-எளிய மாணவ-மாணவியருக்கு வழங்குவதற்காக, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பள்ளிச்சீருடை - பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தின் கீழ் ஜக்வா சார்பில் ரூ.20,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
தீர்மானம் 3 - இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி ஏற்பாடு:
சென்ற ஆண்டைப் போல இவ்வாண்டும் இன்ஷாஅல்லாஹ் வரும் ரமழான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. நிகழ்விடம் மற்றும் ஏற்பாட்டுக்குழு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
தீர்மானம் 4 - காயல்பட்டினம் உடல் நலன் ஆய்வு செயல்திட்டத்திற்கு வாழ்த்து:
வட அமெரிக்க காயல் நல மன்றத்தின் ஒருங்கிணைப்பில், தம்மாம் காயல் நற்பணி மன்றம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து காயல்பட்டினத்தில் நடத்தி வரும் “காயல்பட்டினம் உடல்நலன் ஆய்வு - 2011“ செயல்திட்டம் இறையருளால் வெற்றி பெற எம்மன்றம் வாழ்த்துகிறது.
தீர்மானம் 5 - சிங்கை கா.ந.மன்ற புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாப் ரஷீத் ஜமான் தலைமையிலான புதிய நிர்வாகக் குழுவிற்கு ஜக்வா தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூது ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
M.L.ஸதக்கத்துல்லாஹ்,
செயற்குழு உறுப்பினர்,
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா),
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம். |