தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, தூத்துக்குடி அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் 13.05.2011 அன்று (நேற்று) நடைபெற்றது.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவத்த அவர்,
நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் என்னை வெற்றிபெறச் செய்துள்ள திருச்செந்தூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், அஞ்சாநெஞ்சர் மு.க. அழகிரி அவர்கள் காட்டும் திசையில், தொடர்ந்து தங்குதடையின்றி பயணிப்பேன் என்றார்.
வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பின்னர், வாக்கு எண்ணுமிடத்திலிருந்து வெளியில் வந்த அவரை கட்சித் தொண்டர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அவரையும், தி.மு.க. தலைவர்களையும் வாழ்த்தி அவர்கள் சிறிது நேரம் சாலையில் முழக்கமிட்டனர். அப்போது, தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அனிதா பொதுமக்களிடம் காண்பித்தார்.
தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், காயல்பட்டினம் நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், நகர இளைஞரணி செயலாளர் ஆர்.எஸ்.கோபால், அவ்லியா அப்துர்ரஷீத் இளந்தளிர் முத்து ஆகியோர் உடனிருந்தனர். |