திருச்செந்தூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, தூத்துக்குடி அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் 13.05.2011 அன்று (நேற்று) காலை 08.30 மணியளவில் துவங்கியது. அதிகாலையிலிருந்தே கல்லூரி வளாகத்தின் முன் அரசியல் கட்சியினர் பெருங்கூட்டமாகக் கூடிவிட்டனர். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, வாக்கு எண்ணுமிடத்திற்கு வரும் பகுதிகளிலும், தூத்துக்குடி நகர்ப்புறத்தின் பல பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
வாக்கு எண்ணுமிட அமைப்பு:
வாக்கு எண்ணிக்கை கல்லூரியின் முதல் தளத்தில் நடைபெற்றது. கீழ் தளத்தில் செய்தியாளர்களுக்கு இணையதளம் மூலம் உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக வழங்கப்பட்டன. பெறப்பட்ட தேர்தல் முடிவுகளை, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி முருகேசன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலமாக செய்தியாளர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்தனர். தேர்தல் முடிவுகளை பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் கல்லூரி வளாகத்தின் வெளிப்பகுதியிலும் கேட்கும் அளவில் ஒலிபெருக்கி நிறுவப்பட்டிருந்தது.
தி.மு.க. – அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கிடையில் கடும்போட்டி:
காயல்பட்டினத்தை உள்ளடக்கிய திருச்செந்தூர் சட்டசபைத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.மனோகரன் ஆகியோரிக்கிடையில்தான் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் கடைசி சுற்றான 21ஆவது சுற்று வரை இழுபறி நிலை நீடித்தது.
அனிதா பின்னடைவு:
வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், ஆறாவது சுற்று வரை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகித்த அனிதா, ஏழாவது சுற்றின்போது வெறும் 315 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையிலிருந்தார். இது அவரது ஆதரவாளர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. எனினும் காயல்பட்டினம் மக்கள் நிச்சயம் காப்பாற்றுவர் என்று கூறியவாறே, காயல்பட்டினம் வாக்குகள் எண்ணப்படுவதை அவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் 8ஆவது சுற்றின் இறுதியில் அனிதா (திமுக) 27,499 வாக்குகளும், பி.ஆர்.மனோகரன் (அதிமுக) 27,934 வாக்குகளும் பெற்றதாக அறிவிப்பு வெளியானவுடன் 435 வாக்குகள் அனிதா (திமுக) பின்னடைவானதறிந்து திமுகவினர் கவலையுற்றனர்.
அனிதாவைக் காப்பாற்றிய காயல்பட்டினம் வாக்குகள்:
இந்நிலையில் காயல்பட்டினத்தின் வாக்குப் பதிவுகளை உள்ளடக்கிய 9ஆம் சுற்று மற்றும் பத்தாம் சுற்று முடிவுகள் தி.மு.க.வினருக்கு இன்ப அதிர்ச்சியையளித்தது.
ஒன்பதாம் சுற்றில்,
அனிதா (திமுக) 31,218 வாக்குகளும்,
பி.ஆர்.மனோகரன் (அதிமுக) 30,419 வாக்குகளும்
பெற்றிருந்தனர். இதன் மூலம் அனிதா 799 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
பத்தாவது சுற்றில்,
அனிதா (திமுக) 35,282 வாக்குகளும்,
பி.ஆர்.மனோகரன் (அதிமுக) 31,482 வாக்குகளும்
பெற்றிருந்தனர். இதன் மூலம் அனிதா 3,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இந்த திடீர் மாற்றம் திமுகவினருக்கு மகிழ்ச்சியையும், அதிமுகவினருக்கு அதிர்ச்சியையும் அளித்தது.
மீண்டும் அனிதா பின்னடைவு:
இந்நிலையில், 15ஆவது சுற்றிலிருந்து அனிதாவின் முன்னிலை வாக்கு வித்தியாசம் மெல்ல மெல்ல சரிந்து, இறுதிச்சுற்றான 21ஆவது சுற்றில்,
அனிதா (திமுக) 67,773 வாக்குகளும்,
பி.ஆர்.மனோகரன் (அதிமுக) 67,891 வாக்குகளும்
பெற்றிருந்தனர். இதன் மூலம் அனிதாவை விட பி.ஆர்.மனோகரன் 118 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். அதன் பிறகு அஞ்சல் வாக்குகளும் எண்ணப்பட்டது. அதன் முடிவில்,
அனிதா (திமுக) 68,453 வாக்குகளும்,
பி.ஆர்.மனோகரன் (அதிமுக) 67,936 வாக்குகளும்
பெற்றிருந்தனர். இதன் மூலம் அனிதா 517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காயல்பட்டினம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது:
இதனிடையே வாக்கு எண்ணிக்கையின் 10ஆவது சுற்றில், காயல்பட்டினம் காட்டுத்தைக்காத் தெருவை உள்ளடக்கிய 93ஆவது வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதையடுத்து முடிவு அறிவிக்க முடியாத நிலை இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் இதர சுற்றுகள் முடிவுற்றதும், பழுதடைந்த அந்த இயந்திரம் சரி செய்யப்பட்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அனிதா வெற்றி:
இந்த முடிவின்படி, 640 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை களக்காட்சி இவ்வாறாக அமைந்திருந்தது.
களத்தொகுப்பில் உதவி:
S.J.மஹ்மூதுல் ஹஸன்,
தீவுத்தெரு, காயல்பட்டினம். |