தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, தூத்துக்குடி அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் 13.05.2011 அன்று (நேற்று) காலை 08.30 மணியளவில் துவங்கியது.
ஒவ்வொரு சுற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதும், அனைத்தூடகங்களின் செய்தியாளர்கள் அவற்றை உடனுக்குடன் பதிவு செய்து தமது செய்தி நிறுவனங்களுகுகு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இதனிடையே, செய்தியாளர்களில் சிலர் தமது தேவைக்காக வெளிச்சென்று மீண்டும் உள்ளே வந்தபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட - எத்தனை முறை வேண்டுமானலும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் (Entry / Re-entry into Counting Centres) அனுமதியளிக்கும் அடையாள அட்டையை அவர் காண்பித்த பிறகும் அந்த அதிகாரி அவரைத் தடுத்ததாகத் தெரிகிறது. இதனைக் கேள்வியுற்றதும் பெரும்பாலான செய்தியாளர்கள் அந்த காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து தேர்தல் முடிவுகளை குறிப்பெடுத்துக் கொண்டு, தமது செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்த செய்தியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்கு எண்ணும் வளாகத்தை விட்டும் வெளியேறி, தரையில் அமர்ந்து காவல்துறைக்கெதிராக முழக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் அவ்விடம் பரபரப்புடன் காணப்பட்டது.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |