காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக அமைப்பான Cancer Fact Finding Committee - CFFC குழுமம், நகரில் பல்வேறு சோதனைகளை நடத்தி, முறையான ஆய்வறிக்கைகளைப் பெற்றுள்ளது. அந்த ஆய்வறிக்கைகளின் தொகுப்பு அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பெறப்பட்ட அறிக்கையை ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் அங்கத்தினர் 11.05.2011 அன்று ஐக்கிய அரபு அமீரகம், அபூதபியிலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து அம்மன்றத்தின் துணைத்தலைவரும், CFFC ஒருங்கிணைப்பாளருமான சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில், CFFCயின் ஆய்வறிக்கைத் தொகுப்பை இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு, எம் மன்றத்தின் மூத்த உறுப்பினரும், ஆலோசனைக் குழு தலைவருமான ஜனாப் இம்தியாஸ் அவர்கள் தலைமையில், மன்ற துணைத்தலைவர் மக்பூல், உறுப்பினர்களான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, எம்.ஓ.அன்ஸாரீ ஆகியோரடங்கிய குழு, 11.05.2011 அன்று ஐக்கிய அரபு அமீரகம் அபூதபியிலுள்ள இந்திய தூதரக அலுவலகம் சென்றனர்.
அங்கு இந்திய தூதுவரால் நமக்கு அடையாளம் காண்பிக்கப்பட்ட H.E. Mr. Rajagopalan, Commercial Counsellar அவர்களை மன்றக் குழுவினர் சந்தித்து நீண்ட நேரம் உரையாடி, மன்றத்தின் சார்பில் CFFCயின் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
அவர் தமிழர் என்பதால், காயல்பட்டினம் எதிர்கொண்டுள்ள ஆபத்தான பிரச்சினைகள் குறித்து மன்ற அங்கத்தினர் கூறியவற்றை ஆர்வத்துடன் செவிமடுத்தார்.
இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பெறப்பட்ட ஆய்வறிக்கையை உடனடியாக அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பதாக அப்போது அவர் உறுதியளித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |