காயல்பட்டினம் சமூக நல்லிக்க மையம் (தஃவா சென்டர்) நடத்தும் “வெற்றியை நோக்கி” எனும் தலைப்பிலான இரண்டு நாள் இஸ்லாமிய மாநாடு இம்மாதம் 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது.
நிறுவனத்தின் 14ஆம் ஆண்டு நிறைவு விழா, புதிய கட்டிடத் திறப்பு விழா ஆகியவை முக்கிய நிகழ்ச்சிகளாக இடம்பெறவுள்ளன. இதுவரை பழுதடைந்த வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தஃவா சென்டருக்கென காயல்பட்டினம் குட்டியாபள்ளிக்கருகில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அதன் பெண்கள் பிரிவு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா கண்டது. கட்டிடத்தின் அனைத்துப் பகுதி கட்டிடப் பணிகளும் பூர்த்தி செய்து முடிக்கப்பட்டுள்ளதையடுத்து முழுமையாக திறந்து வைக்கப்படவுள்ளது.
களக்காடு மேலப்பத்தையைச் சார்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் பகத்சிங் முஹம்மத் புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார். அத்துடன், மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள - “இவ்வளவு முன்மாதிரியா நபிகளாரிடத்தில்?” எனும் தலைப்பிலான நிழற்பட கண்காட்சி மற்றும் இஸ்லாமிய அறிவியல் கண்காட்சியையும் அவர் துவக்கி வைக்கிறார்.
விழாவில், கோவையைச் சார்ந்த மூடநம்பிக்கைப் பிரச்சாரக் குழு சார்பில் “பேயாட்டம்” என்ற நேரடி நிகழ்வும் நடத்தப்படுகிறது.
விழாவின் முக்கிய அம்சமாக, “கலாச்சாரப் பிரச்சினைகளும், இஸ்லாமிய தீர்வுகளும்” எனும் தலைப்பில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் வழிநடத்தலில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. “வட்டியில்லா இஸ்லாமிய வங்கி - ஒரு செயல்முறை விளக்கம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. “இந்தியாவில் இஸ்லாம் - ஒரு வரலாற்றுப் பார்வை” எனும் தலைப்பில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் சிறப்புரையாற்றுகிறார்.
இஸ்லாம் மார்க்கத்தை புதிதாக தம் வாழ்வியலாக்கிக் கொண்ட மாணவ-மாணவியரின் அனுபவ உரைகளும் இடம்பெறுகின்றன. நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.
அனைத்து பொதுமக்களும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கென தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. |