தமிழக சட்டசபை தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், துணை சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் தனபால் ஆகியோர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 16ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
தற்காலிக சபாநாயகராக, இந்திய குடியரசு கட்சியின் எம்.எல்.ஏ., செ.கு.தமிழரசன் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தமிழரசனுக்கு, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். நேற்று சட்டசபையில் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்றனர். அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் தமிழரசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வரும் 27ம் தேதி, சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது. சபாநாயகர் பதவிக்கு வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், துணை சபாநாயகராக நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான தனபால் ஆகியோர் அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தகவல்:
தினமலர் |