காயல்பட்டினம் மரைக்கார்பள்ளித் தெருவிலுள்ள பெரிய கல் தைக்கா வளாகத்தில் நடைபெற்று வருகிறது முஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வான் மகளிர் பாடசாலை.
பள்ளிக்கூடம் செல்லும் மாணவியருக்கு, அவர்களின் வார விடுமுறைக் காலங்களில் தீனிய்யாத் எனும் மார்க்கக் கல்வி இம்மத்ரஸா மூலம் போதிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் இம்மத்ரஸா சார்பில் மார்க்க விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழாக்கள் இம்மாதம் 28, 29, 30 தேதிகளில் தைக்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மத்ரஸா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
இறையருள் நிறைவாய் சூழ்க!
இரஸுல் நபியின் நல்லன்பு பெறுக!!
இறை நேசர்களின் நல்லாசி நிலவுக!!!
பேரன்பு பெருந்தகையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
முக்கியம் இஸ்லாமிய இளஞ் சிறுமியர்களுக்கு அடிப்படை மார்க்க ஞானத்தையும் ஒழுக்கத்தையும் போதித்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை நெறிமுறையில் மாணவியர்களை நன்முறையில் உருவாக்கி வருவதுதான் எமது கல்விக் கருவூலம் முஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வான்.
நமது மத்ரஸாவில் வழமை போன்று இவ்வருடமும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1432 ஜமாஅத்துல் ஆகிர் பிறை 24,25,26 (2011 மே மாதம் 28,29,30) சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் உயிரினும் மேலான உத்தம நபி அவர்களின் உதய தின விழாவும், கருணைக் கடல் காருண்ய ஜோதி குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் நினைவு தின விழாவும், எம் கல்விக் கேந்திரத்தின் 36ஆம் ஆண்டு துவக்க விழாவும் இனிதே நடைபெறவுள்ளது.
அவ்வமயம் இன்ஷா அல்லாஹ் மாணவிகளுக்கான சன்மார்க்க போட்டிகளையும் நன்மார்க்க நிகழ்ச்சிகளையும் சிந்தைக்கினிய சீர்மிகு நிகழ்வுகளையும் இறையருளாலும், இரசூல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியோடும், இறை நேசச் செல்வர்களின் இனிய துஆ பொருட்டாலும் இனிதுற நடாத்தவுள்ளோம்.
எனவே அனைத்து நிகழ்வுகளிலும் தாங்கள் அவசியம் வருகைத் தந்து சிறப்பிப்பதுடன் விழாக்கள் சிறப்புற நடைபெறுவதற்காகவும், இம்மத்ரஸாவின் மேன் வளர்ச்சிக்காகவும் தாங்கள் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
வல்ல நாயன் நம்மனைவர்களுக்கும் ஈறுலக நற்பேறுகளையும் தந்தருள்வானாக! ஆமீன். வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |