அமீரகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) பள்ளி செல்வோம் என்ற கல்வி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வருடா வருடம் மேற்கொண்டு வருகிறது.
அந்த அடிப்படையில் இந்த வருடம் மே 24 முதல் 31 வரை அமீரகம் முழுவதும் நடைபெறும் இந்தப் பிரச்சாரம் குறித்து EIFF வெளியிட்ட அறிக்கை வருமாறு:
ஒரு காலம் இருந்தது. ஐரோப்பியர்கள் முஸ்லிம்களிடம் ஓடோடி வந்து கல்வியைக் கற்றார்கள். அப்பொழுது ஐரோப்பா இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்டது. முஸ்லிம் உலகம் அறிவின் ஒளியாகத் திகழ்ந்தது. அந்தலூஸ் என்னும் ஸ்பெயினில் கார்டோபா பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் அறிஞர்களிடம் கல்வி கற்பதற்காக ஐரோப்பியர்கள் காத்துக் கிடந்தார்கள்.
ஆம்! அன்று முஸ்லிம்கள் அறிவியலின் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். அவிசென்னா என்றழைக்கப்படும் அலீ இப்னு சீனா என்ற மருத்துவ அறிஞர் மருத்துவ உலகின் தந்தை என்று அறியப்படுகிறார். வானியல் ஆராய்ச்சியில் முஸ்லிம்கள் சிறந்து விளங்கினார்கள். கணிதவியலில் முஸ்லிம்களின் சாதனை அளப்பரியது. ‘அல்ஜிப்ரா’வைக் கண்டுபிடித்தது முஸ்லிம்கள்தான். அமரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸுக்கு வழிகாட்டியாக இருந்தது ஒரு முஸ்லிம்தான். ஏனெனில் அன்று முஸ்லிம்கள்தான் கடல் மார்க்க வரைபடத்தை வரைந்தார்கள். இப்படி விஞ்ஞான வளர்ச்சியில் முஸ்லிம்கள் முக்கிய பங்கு வகித்தார்கள்.
கல்வி காணாமல் போன சொத்து. அதனை எங்கு கண்டாலும் பெற்றுக்கொள்ளுங்கள் என்ற எம்பெருமானாரின் கூற்றை அவர்கள் நன்குணர்ந்திருந்தார்கள். அதனால் உலகமே போற்றும் அளவுக்கு கல்வியில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் இன்று….? கல்வி நம்மிடம் காணாமல் போன சொத்தாகி விட்டது. நாம் கல்வியைக் கைவிட்டோம். ஏனையவர்கள் கல்வியைக் கையில் எடுத்தார்கள். அதனால் இன்று அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.
ஜூன் மாதம் வந்து விட்டாலே, நம் அனைவருக்கும் மனதில் உதிப்பது ‘பள்ளிக்கூடம் செல்லும் நாள்’ தான். ஆம்! நீண்ட விடுமுறைக்குப் பிறகு அனைவரும் பள்ளிக்கு தங்கள் படிப்பைத் தொடர, புதிதாய் கல்வியை ஆரம்பிக்க எத்தனை எத்தனை மாணவர்கள் பல வகையான குடும்பங்களிலிருந்து ஒன்றாய் சங்கமிப்பார்கள்! ஆனால் நம்மில் பல குடும்பங்களுக்கு அது ஓர் இருண்ட மாதம்! காரணம், பள்ளிக் கட்டணம், சீருடைக் கட்டணம், புத்தகக் கட்டணம் போன்ற பெருஞ்சுமைகள். அன்றாட உணவுக்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் போராடும் நம் சமூகத்தில் பலருக்கு பள்ளிக்கூடம் சென்று கல்வி பயிலுதல் என்பது எட்டாக் கனியாக, கானல் நீராகவே உள்ளது.
கல்வியா, வயிற்றுப் பசியா என்று வருகிறபொழுது கல்வியைக் ‘கை’ கழுவி, கண்மணிகளான நம் இளஞ்சிறார்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் அவல நிலை. மற்ற சமூகத்தினர் அனைவரும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து, தங்களின் வறுமையைப் பொருட்படுத்தாமல் தத்தம் குழந்தைகளுக்கு சீரான கல்வியைக் கொடுத்துக் கொண்டிருப்பதனால், அவர்களின் முன்னேற்றத்தை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கல்வியின் முக்கியத்துவம் பற்றி நமது சமுதாயம் நன்கறிந்திருந்தும், நம் குழந்தைகளின் கல்வியின் நிலையை மாற்ற, ஒரு சிறு மணித்துளி கூட செலவிட விரும்புவது இல்லை என்பதுதான் உண்மை.
எந்த ஒரு கூட்டம் கல்வியைத் தொலைத்து - கல்வியின் ருசியை மறந்தார்களோ அந்தச் சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது கேள்விக்குறிதான். அவர்கள் அன்றாடங் காய்ச்சிகளாக உலா வருவதில் வியப்பு ஏதும் இல்லை. இறைவன் நம்மைப் பாதுகாக்கட்டும்! கல்வி என்பது ஒருவனை முழு மனிதனாக மாற்றி - சமுதாயத்தில் ஓர் உன்னத இடத்தை அளிக்கிறது. ஒருவனின் முழுமையான கல்வி, அவனை மட்டுமல்ல, அவனது சந்ததியையே மேன்மைப்படுத்தி பொருளாதார இன்னல்களையும் துடைத்தெறிகிறது. நம் சமூகத்தில் இன்றும் ஒரு பிரிவினர் கல்வியை எட்டாக் கனியாகவும், இன்னொரு பிரிவினர் கசப்பான பாகற்காயாகவும் பார்ப்பது நம்மைக் கவலையுறச் செய்கின்றது. முதல் பிரிவினர் ஆர்வமாக இருப்பார்கள். கல்வியில் சாதிப்பதற்கு துடிப்பார்கள். ஆனால் அவர்களின் குடும்ப, பொருளாதாரச் சூழ்நிலையினால் அவர்களுக்கும், கல்விக்கும் இடையே நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பிரிவினருக்கு அனைத்து வசதிகளும் இருக்கும். ஆனால் கல்வி கஷாயமாகக் கசக்கும். இவர்கள் கல்வியைச் சிறிது காலத்திற்கு பொழுதுபோக்காக எடுத்துவிட்டு, பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். இப்படி கல்வியைக் ‘கை’ கழுவியதால் அவர்கள் பிற்காலத்தில் அனுபவிக்கும் அவலங்கள் எண்ணிலடங்கா! ஒவ்வொரு கல்வியாண்டிலும், நமது சமூகத்தினரின் கல்வி கற்றோர் விழுக்காடு குறைந்து கொண்டிருக்கும் நிலையை எண்ணும்பொழுது நெஞ்சம் கனக்கிறது. ஏன் இந்த அவல நிலை?
புத்தகச் சுமையை ஏந்தும் தோள்களில், குடும்ப பாரத்தைச் சுமக்கும் சூழ்நிலை. கல்வி கற்கவே வழியில்லை பாதி பேருக்கு! இதில் அரசு நமக்குத் தரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டினால் என்ன பயன்? கால் இல்லாதவனுக்கு காலணி வாங்கிய கதைதான். நம் சமூகத்தில் 95 சதவீத மக்கள் கல்வி என்னும் செல்வம் கிடைக்காமலேயே காலத்தைக் கடத்துகிறார்கள். செருப்பு தைப்பவர்களாக, தினக் கூலிகளாக, ரிக்ஷா ஓட்டுபவர்களாக, கைவண்டி இழுப்பவர்களாக, நடைமேடைகளில் சிறு பொருட்கள் விற்பவர்களாக, தள்ளுவண்டி வியாபாரிகளாக, பீடி சுற்றுபவர்களாக… என்று சமூகத்தின் அடித்தட்டு மக்களாகவே முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
ஏன்? நம் கண் முன்னால் நடப்பதைப் பற்றிப் பேசுவோமே... அமீரகத்தில் நல்ல பதவியில் இருக்கும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? நம்மில் பலர் கல்வியை இடையிலேயே தொலைத்ததன் பலனாக வாழ்க்கை முழுவதும் எந்த ஒரு வசதியும் இல்லாமல் லேபர் கேம்ப்களில் அடைப்பட்டுக் கிடக்கும் அவல நிலை. கல்வி ஒருவனை வேறுபடுத்திக் காட்டுகின்றது. கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. இத்தகைய நிலைக்கு ஒரே காரணம் நாம் கல்வியை மறந்ததுதான். எனவே கல்லாமையை இல்லாமல் ஆக்குவோம். கல்விக் கண் திறப்போம்.
கடந்த காலத்தை விடுங்கள். நிகழ்காலத்தில் நம்மால் முஸ்லிம் சமூகத்தைக் கல்வியில் உயர்த்துவதற்கு என்னென்ன வழிகளில் உதவலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும். ஓர் ஏழை மாணவனுக்குக் கல்வி கற்க பொருளாதார உதவி செய்தால் இம்மையிலும், மறுமையிலும் அது மிக்க பலன்களைத் தரும்.
‘‘அல்லாஹ்வின் பாதையில் அழகிய கடன் கொடுப்பவர் யார்? பின்னர் அதனை அவருக்கு அவன் இரட்டிப்பாக்கித் தருவான்’‘ (57:11) என்று அல்லாஹ் தன் அருள்மறையில் குறிப்பிடுகின்றான்.
ஒரு குழந்தையின் செலவை ஏற்றுக் கொள்ளுதல், தங்களிடமுள்ள பழைய புத்தகங்களை வழங்குதல், கற்றவர்கள் இலவசமாகக் கற்றுக் கொடுத்தல், வியாபாரிகள்-முதலாளிகள் நோட்டு, புத்தகம், பேனா இலவசமாக வழங்குதல், வட்டியில்லாக் கடன் வழங்குதல், கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் கல்விக் கழகங்களை முஹல்லாக்கள் தோறும் உருவாக்குதல், இலவச மிதிவண்டி வழங்குதல் போன்றவை மூலம் சமூகத்தை கல்வியில் மேம்படுத்த உதவலாம்.
இதனடிப்படையிலேயே எமிரேட்ஸ் இந்தியா ஃபிரேட்டர்னிட்டி ஃபோரம் ‘பள்ளி செல்வோம்’என்ற கல்வி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வருடாவருடம் அமீரகத்தில் நடத்தி வருகிறது. 25க்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை ஆகும் செலவுகளைப் பொறுப்பேற்று கடந்த இரண்டு வருடங்களாகச் சிறப்பாகச் செய்து வருகின்றது. இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண்களைத் திறக்கவுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
தகவல்:
எம்.எஸ். அப்துல் ஹமீத்,
செயலாளர், எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF).
|