காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு சாலைகள் புதிய சிமெண்ட் சாலைகளாக அமைக்கப்படுவதற்காக டெண்டர் விடப்பட்டு, 31.03.2011 தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டுமென காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி இன்று வரை பல சாலைகளில் புதிய சாலை அமைக்கப்படவில்லை என்பதையும் தாண்டி, புதிய சாலை அமைப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பல மாதங்களாகியும் இன்றும் அதே நிலையிலேயே உள்ளன.
இதனால், அத்தெருக்களில் தானி (ஆட்டோ) உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் செல்ல இயலாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர் அப்பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள்.
புதிய சாலை அமைக்கப்படுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, பணிகளும் துவக்கப்பட்ட நிலையில், அதற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்புகளால் அப்பணிகளுக்கு எவ்வித பாதிப்புமில்லையெனினும், தேர்தல் முடிவுற்ற பிறகேனும் பணிகள் துவக்கப்படலாம் என்ற எண்ணம் அப்பகுதி மக்களுக்கு இன்றளவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், காயல்பட்டினம் நகராட்சி மன்ற ஆணையாளர் (பொறுப்பு) கண்ணையா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,
புதிய சாலை அமைக்கும் ஒப்பந்தக்காரர்களிடம் காலதாமதம் குறித்து காரணம் கேட்டு நகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பினோம்... சாலை அமைப்பதற்குத் தேவையான பொருட்களில் மணல் தவிர அனைத்துப் பொருட்களும் ஆயத்தமாகவே உள்ளன என்றும், மணல் சிறிதளவு கூட இல்லாத காரணத்தால் பணிகள் அனைத்தும் தேக்கத்தில் உள்ளதாகவும் அவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்...
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மணற்குவாரிகளிலிருந்தும் மணல் எடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அக்காரணத்தின் உண்மை நிலையை அறிந்துகொண்ட காரணத்தால் எங்களால் தொடர்ந்து வற்புறுத்த இயலவில்லை...
அதே நேரத்தில், புதிய சாலைகள் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களால் பகுதி மக்கள் சந்தித்து வரும் துன்பங்களைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டுள்ளோம்... என்றார்.
அவரது கருத்தின் அடிப்படையில், புதிய சாலை அமைக்கப்படுவதற்கு இன்னும் சில காலம் செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. |