"ஜூன் 15ம் தேதிக்கு முன் பள்ளி திறக்கக் கூடாது' என வலியுறுத்தி, அனைத்து சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் சுயநிதி பள்ளிகளில், மார்ச் மாதம் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டன. தேர்வு முடிவடைந்ததும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கோடை விடுமுறை விடப்பட்டு, மீண்டும், ஜூன் 01ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நடைமுறையில் இருந்த ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் உள்ளிட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைந்து, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த கடந்தாண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக, கடந்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு மட்டும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
வரும் கல்வியாண்டான, 2011-12இல், எஸ்.எஸ்.எல்.சி., வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அச்சடிக்கும் பணியும் துரிதமாக நடந்து வந்தது.
புது அமைச்சரவை பொறுப்பேற்ற பின் நடந்த முதல் கூட்டத்தில், வரும் கல்வியாண்டில், சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படவில்லை எனவும், கடந்தாண்டு இருந்த பழைய பாடத்திட்டமே நடப்பாண்டிலும் தொடரும் எனவும் அறிவித்தனர். பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்பதால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், ஜூன் 15ஆம் தேதியன்று திறக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு சில மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள், தங்களுக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை எனக்கூறி, ஜூன் 01ஆம் தேதி பள்ளி திறப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியது.
இந்நிலையில், மெட்ரிக் ஆய்வாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் மூலமாக அனைத்து மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 15ஆம் தேதியன்று தான் பள்ளி திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு அறிவிப்புக்கு முன், விதிமீறி திறக்கப்படும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மட்டும், சிறப்பு வகுப்பு என்ற பெயரில், ஜூன் 03ஆம் தேதி முதல் பாடம் நடத்த திட்டமிட்டு பணிகளில் இறங்கியுள்ளன.
நன்றி:
தினமலர் (26.05.2011)
|