ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் சமர்ப்பிக்கும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை, அவர் 10ஆம் வகுப்பு பயின்ற பள்ளியில் பரிசீலித்த பின்பே சேர்க்கை வழங்க வேண்டுமென தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் போலி மதிப்பெண் பட்டியல் கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரிகளில் சேர பலர் போலி மதிப்பெண் பட்டியலை தயார் செய்து வந்தது தேர்வுத் துறையையே கலங்கடித்தது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்த ஆண்டு பிளஸ் 1 மாணவர் சேர்க்கையின்போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை, தொகுப்பு மதிப்பெண் பட்டியலுடன் (டோட்டல் மார்க் லிஸ்ட்) ஒப்பிட்டுப் பார்த்து சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மதிப்பெண் பட்டியலை முழுமையாக நம்பியே மாணவர் சேர்க்கை நடந்தது. அரசு உத்தரவு மூலம் இம்முறை பள்ளியிலேயே போலி மதிப்பெண் பட்டிலுக்கு "செக்' வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் (கடித எண் - 32054, நாள் 12.5.2011) அனுப்பியுள்ள கடிதத்தில், "பிளஸ் 1 வகுப்புக்கு அதே பள்ளியில் படித்த மாணவர் எனில், டோட்டல் மார்க் லிஸ்டுடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். வேறு பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர் எனில், அவரது மதிப்பெண்ணை, அவர் 10ஆம் வகுப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியருடன் தொலைபேசி மூலமோ, வேறு வழியிலோ தொடர்புகொண்டு, மதிப்பெண்ணை சரிபார்த்த பின்பே அனுமதிக்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"ஒவ்வொரு மாணவரையும் சேர்க்கும்போது, இதுபோல விசாரித்து அதன்பின் அனுமதிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக தேர்வுத்துறையின் வெப்சைட்டில் மதிப்பெண்ணை வெளியிட வேண்டும். பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு இறுதி நாளான ஆக, 31ஆம் தேதி வரை வெப்சைட்டில் மதிப்பெண் இடம்பெற வேண்டும். அதை பார்த்தே மாணவர் சேர்க்கையை நடத்த வழி ஏற்படுத்தலாம்,' என பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
நன்றி:
தினமலர் (25.05.2011)
|