சென்னை கண்ணாடி வாப்பா ஹமீதிய்யா அரபிக்கல்லூரி, அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் நடத்திய - மூன் தொலைக்காட்சியின் புனித கிராஅத்துல் குர்ஆன் முதற்கட்ட இறுதிப்போட்டிகள் வாவு வஜீஹா கல்லூரி கேளரங்கில் அமைக்கப்பட்டிருந்த பலவண்ண அலங்கார மேடையில் 14.05.2011 முதல் 17.05.2011 வரை நடைபெற்றது.
கடந்த பல மாதங்களாக மூன் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சி மூலம் தொலைபேசி வாயிலாக நடத்தப்பட்ட கிராஅத்துல் குர்ஆன் போட்டியில் தேர்வானவர்கள் இந்த இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கான முதற்கட்ட இறுதிப்போட்டி வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி கேளரங்கில் 14.05.2011 முதல் 17.05.2011 வரை ஆண்கள், பெண்கள், சிறுவர் ஆகியோருக்கு தனித்தனி நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டன.
14.05.2011 அன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிகளுக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி எஸ்.எம்.பி.சித்தீக், ஹாஜி எம்.கே.ஷேக் சிந்தா மதார் என்ற அரஃபாத் சிந்தா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கடைசியாக நடைபெற்ற போட்டிக்கு தமிழகத்தின் தலைசிறந்த காரீகளான மவ்லவீ காரீ முஹம்மத் இஸ்ஹாக், மவ்லவீ காரீ சித்தீக் அலீ பாக்கவீ, இலங்கையின் தலைசிறந்த காரீ மவ்லவீ அப்துல் ஹலீம் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
பின்னர், 17.05.2011 அன்று மாலை 05.00 மணிக்குத் துவங்கிய பரிசளிப்பு விழாவிற்கு இ.டி.ஏ. அஸ்கான் மேலாண்மை இயக்குனர் ஸெய்யித் எம்.ஸலாஹுத்தீனின் சகோதரரான செய்யித் அப்துல் காதிர் என்ற சீனா தானா தலைமை தாங்கினார். ஹாஃபிழ் காரீ கிழ்ரு முஹம்மத் ஆஷிக் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, முன்னிலை வகித்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் பரிசுபெறத் தேர்வான மற்றும் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களையும், மூன் தொலைக்காட்சியையும் வாழ்த்திப் பேசினார். பின்னர், மவ்லவீ ஷேக் அப்துல்லாஹ் ஜமாலீ வாழ்த்துரை வழங்கினார்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை திருக்குர்ஆனை ஓதச் செய்து அதை விரும்பிக் கேட்ட நிகழ்வுகள், இனிமையாக திருமறை குர்ஆனை ஓதுபவருக்கு அவர்கள் வழங்கிய தகுதிகள், இவ்வுலகம் - மறுவுலகத்தில் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் நற்பாக்கியங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ விளக்கிப் பேசினார்.
அடுத்து உரையாற்றிய காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ, திருக்குர்ஆனை இனிய குரல், அழகிய தொனியில் ஓதுவதன் மகத்துவம் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
குர்ஆனை இனிமையாக ஓதுவதற்கான சட்டதிட்டங்கள் அடங்கிய தஜ்வீத் அடிப்படையில் ஓதுவது தனி கலைதான் என்றாலும் கூட, அது விரும்பினால் கற்கப்பட வேண்டிய ஒன்றல்ல... மாறாக, குர்ஆனை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கத் துவங்கும்போதே தஜ்வீத் முறையுடன்தான் கற்றுக்கொடுக்க வேண்டும்...
இன்று பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் குர்ஆனைத் துவக்கமாக கற்றுக்கொடுக்கும்போது தஜ்வீதின்றி கற்றுக்கொடுப்பதால், பிற்காலத்தில் அவர்கள் தஜ்வீதுடன் ஓதவேண்டிய நிலை வரும்போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது... துவக்கத்திலேயே தஜ்வீதுடன் கற்றுக்கொண்டால் இச்சிரமம் தேவையற்றதாகிவிடும்...
எனினும், மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட சில நாடுகளில் குர்ஆனை இனிமையாக ஓதும் இந்த தஜ்வீத் கலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது...
இவ்வாறு தனதுரையில் தெரிவித்த அவர், குர்ஆனை தஜ்வீதுடன் ஓதுவது குறித்த விழிப்புணர்வை மூன் டிவி நிர்வாகம் அவசியம் செய்திட வேண்டுமென்றும், தகவல் தொடர்புகள் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் இச்செயலைச் செய்திட மூன் டிவி மிகப்பொருத்தமான ஊடகம் என்றும் தெரிவித்தார்.
பின்னர், ஆண்கள் - பெண்கள் - சிறுவருக்கான புனித கிராஅத்துல் குர்ஆன் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. 30 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முதற்கட்ட இறுதிப்போட்டியில், காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த காரீ ஏ.டி.முஹம்மத் அப்துல் காதிர் என்பவரின் மக்களான ஹாஃபிழ் எம்.ஏ.சி.அஹ்மத் தாஹிர், ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித் ஆகியோர் முதலிரண்டு பரிசுகளையும், காயல்பட்டினம் ஆஸாத் தெருவைச் சார்ந்த ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகன் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர். சிறுவர்களுக்கான போட்டியில் கிழுறு முஹம்மத் ஆஷிக் என்பவரின் மகன் கே.எம்.ஏ.முஹம்மத் அப்துல் காதர் முதல் பரிசு பெற்றார். அவர்களுக்கு பணப்பரிசும், கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பெண்களுக்கு பெண்கள் பகுதியிலேயே பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவை நடத்திய வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிர்வாகத்தைப் பாராட்டி, அதன் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மானுக்கு கேடயம் வழங்கப்பட்டது. பரிசுகள் மற்றும் கேடங்களை ஹாஜி செய்யித் அப்துல் காதிர் என்ற சீனா தானா வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இறுதிப்போட்டிக்கு நடுவர்களாகப் பணியாற்றிய இலங்கையைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல் ஹலீம், தமிழகத்தைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் காரீ சித்தீக் அலீ பாக்கவீ ஆகியோர் தமதினிய குரல்களில் திருமறை குர்ஆனை கிராஅத்தாக அழகுற ஓதி, பார்வைகளை வெகுவாகக் கவர்ந்தனர். காரீ சித்தீக் அலீ பாக்கவீ - திருமறை குர்ஆனை ஏழு வகைகளில் ஓதும் கலையான ஸபஉ கிராஅத் முறையில் ஓதினார்.
முதற்பரிசு பெற்ற மாணவர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித் அலீயும் கிராஅத் ஓதினார்.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை மூன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான ஆஸிஃப் அஹ்மத் குரைஷி, ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் தொகுத்தளித்தனர். மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை துஆவுடன் விழா நிறைவுற்றது.
விழாவில், காயல்பட்டினம் மற்றும் வெளியூர்களைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மூன் டிவி அங்கத்தினருடன் இணைந்து வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் செய்திருந்தார்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மூன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |