ரியாத், சவுதிஅரேபியா - இறைவனின் அருளால் சென்ற 17.06.1432 (20.05.2011) வெள்ளிக்கிழமை ரியாத், நிவ் ஸினாஇய்யா தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தஃவா நிகழ்ச்சியொன்று அரங்கேறியது அதில் காயலர்கள் உள்பட பெரும்பாலோனர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். மதியம் 11.00 மணிக்கு தலைமை உரையை நிகழ்த்தினார் தஃவா நிலையத்தின் தமிழ் அழைப்பாளர் அஷ்ஷைக் முனவ்வர் (மதனி) அவர்கள். தலைமை உரையை அடுத்து 'உளத்தூய்மைக்கு இஸ்லாம் கூறும் வழிவகைகள் யாவை?" எனும் தொனிப்பொருளில் அதே அழைப்பாளர் மூலமாக சிற்றுரையொன்று இடம்பெற்றது. அதனை அடுத்து குத்பாப் பிரசங்கமும், ஜும்ஆத் தொழுகையும் இடம்பெற்றன.
ஜும்ஆத் தொழுகையை அடுத்து குத்பாப் பிரசங்கத்தின் சாராம்சம் அஷ்ஷைக் முஆஸ் அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. 'நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படியே நிகழும் என்பதை ஆணித்தரமாகப் புகட்டும் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்| எனும் கலிமா எம் நாவுகளில் சதாவும் திளைக்க வேண்டும்" என்பதே அதன் தலைப்பாகும்.
அடுத்த நிகழ்ச்சியாக தம்மாம், அல் கொபார் தஃவாக் கிளையிலிருந்து விஷேட பேச்சாளராக வருகை தந்த அஷ்ஷைக் அலி அக்பர் (உமரி) அவர்கள் அமீருல் முஃமினீன் கலீபா உமர் (ரலி) அவர்களின் வாழ்வும், சேவைகளும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் தமதுரையில் 'உமரின் நாவில் இறைவன் பேசுகிறான்" என நபியவர்கள் கூறிய பல்வேறு சந்தர்ப்பங்களையும், அவ்வாறு கூறியதற்கான காரணத்தையும் எடுத்துரைத்ததோடு, அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்துக்குச் செய்த சேவைகளையும் பட்டியலிட்டுக் காட்டினார்.
அதனை அடுத்து உரையிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு பத்து வினாக்கள் சபையோரிடம் வினவப்பட்டு சரியான பதிலளித்தோர் பரிசுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பகலுணவுக்காகவும் அஸர்த் தொழுகைக்காகவும் இடைவேளை வழங்கப்பட்டது.
அஸர்த் தொழுகையை அடுத்து ஆரம்ப உரையாக 'இஸ்லாத்தில் வேரூண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள்" எனும் தலைப்பில் தம்மாம், அல் கொபார் தஃவா நிலையத்திலிருந்து விஷேட பேச்சாளராக வருகை தந்த அஷ்ஷைக் ரஹ்மதுல்லாஹ் (இம்தாதி) அவர்களது உரை இடம்பெற்றது. நவீன யுகம் என்று மார்தட்டிக்கொள்ளும் இக்காலத்திலும் சமூகத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகளை அவர் அடையாளமிட்டுக் காட்டியதோடு அவைகளை ஒளித்துக் கட்டுவதற்கான வழிகளையும் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அதனை அடுத்து உரையிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு பத்து வினாக்கள் சபையோரிடம் வினவப்பட்டு சரியான பதிலளித்தோர் பரிசுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
அதன் மறுகனமே ரியாத், ரவ்தா தஃவா நிலையத்தின் தமிழ் அழைப்பாளர் அஷ்ஷைக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) அவர்கள் 'இன்றைய முஸ்லிம்களின் சூழ்நிலை என்ன?" என்ற கருப்பொருளில் தமது உரையை ஆரம்பித்தார். சுமார் ஒரு மணிநேரம் நீடித்த அவரது உரையில் 'உஸ்மானியரின் ஆட்சியோடு வீழ்ச்சியடைந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் இன்று வரை தலைதூக்காமல் இருப்பதற்கான மூலகாரணம் என்ன? என்பதையும் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் முக்கியத்துவம் வழங்காது குழுக்களுக்கும் தலைவர்களுக்கும் கண்மூடித்தனமாகக் கட்டுப்படுவதால் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் விளைவுகள் எவை?" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனை அடுத்து உரையிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு பத்து வினாக்கள் சபையோரிடம் வினவப்பட்டு சரியான பதிலளித்தோர் பரிசுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
மஃறிப் தொழுகையை அடுத்து கலந்துகொண்ட பேச்சாளர்கள், மௌலவிமார்கள், பரிசுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் சகலருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதோடு அண்மையில் சத்திய இஸ்லாத்தில் இணைந்த சகோதரர் அஹ்மத் கிருஷ்னா மற்றும் அப்துல்லாஹ் சிவக்குமார் ஆகியோர் கௌரவப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக, ரியாத் தமிழ் தஃவா ஒன்றியத்தின் தலைவரும், தல்லா தஃவா நிலைய தமிழ் அழைப்பாளருமான அஷ்ஷைக் ளபருள்ளாஹ் (பஹ்ஜி) அவர்களின் நன்றியுடையுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.
தகவல்:
அபூ அஹ்மத் சோனா,
தமிழ் தஃவா ஒன்றியம்,
ரியாத், சவுதிஅரேபியா.
|