காயல்பட்டினம் அலியார் தெரு நடுப்பகுதியில் அமைந்துள்ளது கவ்து முஹ்யித்தீன் மத்ரஸா. தாயிம்பள்ளிவாசல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த மத்ரஸா துவக்கப்பட்ட காலத்தில் அப்பகுதியைச் சார்ந்த பெண்களுக்கு மார்க்க அடிப்படைக் கல்வியைப் போதிக்கும் நோக்கில் பெண்கள் மத்ரஸாவாகவே துவக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
நாளடைவில், சுற்றுவட்டார மக்களின் - குறிப்பாக பரிமார் தெருவைச் சார்ந்த இளம் சிறுவர்-சிறுமியரை மார்க்கப் பற்றுள்ளவர்களாக்கிடும் எண்ணத்தில் அவர்களுக்கும் தீனிய்யாத் கல்விப் பிரிவு துவக்கப்பட்டு, பரிமார் தெருவைச் சார்ந்த சிறுவர்-சிறுமியரை பெருமளவிலும், அலியார் தெரு, கே.டி.எம். தெரு, சின்ன நெசவுத் தெரு, பெரிய நெசவுத் தெரு, மேல நெசவுத் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த சிறுவர்-சிறுமியரையும் மாணவர்களாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த மத்ரஸா.
காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற ஆலிமாக்களால் - மாத ஊதியம் எதுவுமின்றி, சேவை அடிப்படையில் இப்பாடப்பிரிவு நடத்தப்பட்டு வருகிறது.
சிறிய அளவிலான வீடு போன்ற ஒரு கட்டிடத்திலேயே இந்த மத்ரஸா செயல்பட்டு வந்ததால், புதிதாக துவக்கப்பட்ட சிறுவர் தீனிய்யாத் பிரிவுக்கு போதிய இடமின்றி அதன் நிர்வாகிகள் திணறி வந்தனர். இந்நிலையில், நகரப் பிரமுகர்களை நேரில் அழைத்து, நிகழ்ச்சியொன்றை நடத்தி, மத்ரஸாவின் இடப்பற்றாக்குறை குறித்தும், விரைவாக அக்குறை போக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார் மத்ரஸா தலைவர் ஹாஜி எம்.எம்.அஹ்மத்.
அதன்பிறகு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைத் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் முயற்சியில் நகரப் பிரமுகர்களிடமிருந்து தேவையான நிதி திரட்டப்பட்டு, புதிய வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அக்கட்டிடத்தின் திறப்பு விழா 26.05.2011 அன்று இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ பிரார்த்தனை செய்ய, ஹாஜி எம்.எம்.உவைஸ் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் தாயிம்பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி தலைமை தாங்கினார். மத்ரஸா மாணவர் எச்.எம்.ஷக்கூர் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
முன்னாள் மாணவர் ஓ.ஏ.கே.யாஸர் அரஃபாத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்துரைக்கும் பாடல்களும், தஃப்ஸ் நிகழ்சியும் மத்ரஸா மாணவர்களால் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சித் தலைவரின் உரையைத் தொடர்ந்து, “மத்ரஸா பற்றிய ஒரு கண்ணோட்டம்” எனும் தலைப்பில், மத்ரஸா தலைவர் ஹாஜி எம்.எம்.அஹ்மத் உரையாற்றினார். பின்னர், மார்க்கக் கல்வியின் அவசியம் குறித்து மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. மத்ரஸாவிற்கு தவறாமல் ஒழுங்குமுறையுடன் வருகை தந்த மாணவர்களுக்கும், நடைபெற்ற ஆண்டிறுதித் தேர்வில் முதல் மூன்று தரங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும், கடந்த ரமழான் மாதத்தில் ஆர்வத்துடன் நோன்பு நோற்ற மாணவ-மாணவியருக்கும், கடந்த 17.05.2011 அன்று காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், மூன் டிவி நிர்வாகத்தால் நடத்தப்பட்ட கிராஅத் போட்டியில் பங்குபெற்ற மாணவருக்கும், மத்ரஸா மாணவர்களுக்கு தஃப்ஸ் பயிற்சியளித்த ஓ.ஏ,கே.யாஸர் அரஃபாத் என்ற முன்னாள் மாணவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்பரிசுகளை, மேடையில் முன்னிலை வகித்த ஹாஜி கத்தீப் ஸலீம், ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், ஹாஜி வாவு சித்தீக் உள்ளிட்டோர் தம் கரங்களால் வழங்கினர்.
இறுதியாக, மத்ரஸா நிர்வாகக் குழுவைச் சார்ந்த எஸ்.எச்.நியாஸ் நன்றி கூற, துஆவுடன் விழா நிறைவுற்றது. நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் தொகுத்தளித்தார். விழாவில் தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் நகரப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்வர் என்ற அன்வர் சாச்சப்பா தலைமையில், மத்ரஸா நிர்வாகக் குழுவினர் மற்றும் ஆசிரியையர் செய்திருந்தனர். |