அறிவியல் பாடத்தை மையமாக வைத்து உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 4 லட்ச ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதற்கான தகுதியான மார்க் 1,146 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 88 பேர் இதற்கு தகுதி படைத்திருப்பதாக முதன்மை கல்வி அதிகாரி பரிமளா தெரிவித்தார்.இந்தியா முழுவதும் ஐ.டி, இன்ஜினியரிங், மருத்துவ மோகத்தில் தான் மாணவ, மாணவிகள் ஒட்டு மொத்தமாக விரும்புகின்றனர். இதனால் அறிவியல் படிப்பு படிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இதனால் அறிவியல் திறனை மாணவர்களுக்கு ஊக்கு விக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் இன்ஸ்பேர் (இனோவேஷன் இன் சைன்ஸ் புர்சூட் பார் இன்ஸ்பேர்டு ரிசர்ச்) என்ற படிப்பு திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயில மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டிற்கு 80 ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு 4 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதன்படி மார்ச் 2011 மேல்நிலை தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிக மார்க் பெற்ற ஒரு சதவீதம் (டாப் 1%) மாணவ மாணவிகளுக்கு இவை வழங்கப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பரிமளா கூறியதாவது:-
நடப்பாண்டு முதல் புதிய திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இன்ஸ்பேர் திட்டத்தின் படி தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 69 மா ணவ, மாணவிகளும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளும்சேர்த்து மொத்தம் 88 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடம்பெற்ற மாணவ, மாணவிகளை தவிர்த்து 3ஆம் இடம்பெற்ற மாணவ, மாணவிகளை இந்த திட்டத்தில் சேர்க்கலாம். இதற்கான தகுதியான மார்க் 1146 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங், மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இவை வழங்கப்படமாட்டாது. பி.எ ஸ்.சி, எம்.எஸ்.சி படிக்கும் தகுதியுள்ள மாணவ, மாணவிகள் 5 ஆண்டில் அரசின் உதவித் தொகை 4 லட்ச ரூபாய் பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணை பதிவு செய்ய பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளிடம் இந்த திட்டம் குறித்து தெரிவித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இதற்கான விண்ணப்பமும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சி.இ.ஓ தெரிவித்தார். கலெக்டர் மகேஷ்வரன், மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
நன்றி:
தினமலர் (26.05.2011)
|