திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வரும் செந்தூர் விரைவுத் தொடர்வண்டியை தினசரி சேவையாக்குவது தாமதப்படுத்தப்பட்டால், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென, 27.05.2011 அன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர ஊழியர் கூட்டம் 27.05.2011 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு, 342, நெய்னார் தெரு, காயல்பட்டினம் என்ற முகவரியில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வடக்கு ஆத்தூர் சாகுல்ஹமீத், மாவட்ட துணைத்தலைவர் கோவில்பட்டி திவான்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
ஊழியர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வாக்காளர்களுக்கு நன்றி:
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்றத் தெர்குதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஆதரவுடன் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, சட்டமன்ற உறுப்பினரின் பணிகள் சிறப்புற வாழ்த்துகிறது.
தீர்மானம் 2 - தேர்தல் வரவு-செலவு கணக்கு தாக்கல்:
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வரவு-செலவு கணக்குகள் இக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தீர்மானம் 3 - செந்தூர் விரைவுத் தொடர்வண்டி தினசரி சேவை:
மத்திய இரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி, செந்தூர் விரைவுத் தொடர்வண்டியை தினசரி சேவையாக இயக்கிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அச்சேவையை திருச்சி, விழுப்புரம் மார்க்கமாக இயக்கிட வேண்டுமெனவும் மத்திய தொடர்வண்டித் துறை அமைச்சரை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, அதற்காக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், தொடர்வண்டித் துறை நிர்வாகம் ஏதேனும் காரணங்களைக் கூறி காலதாமதப்படுத்தும் பட்சத்தில், நமது வட்டார மக்களை ஒன்றுதிரட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டிற்கு ஒத்துழைப்பு:
எதிர்வரும் 2011, ஜூலை 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவிருக்கும் இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் போட்டி:
எதிர்வரும் உள்ளாட்சிமன்றத் தேர்தலில் காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளைத் தெரிவு செய்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதிகளவில் நகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்திட தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரைக்குப் பின், துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்ட ஏற்பாடுகளை நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் செய்திருந்தார். இக்கூட்டத்தில், நகரச் செயலாளர் பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், எஸ்.டி.கமால், ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், எம்.எல்.ஷேக்னாலெப்பை, முஹ்யித்தீன் தம்பி, எம்.எச்.அப்துல் வாஹித், சுல்தான், முக்தார், ஜெ.உமர், ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தகவல்:
A.H.M.முக்தார் மூலமாக,
A.L.S.அபூஸாலிஹ்,
துணைச் செயலாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
காயல்பட்டினம் நகர கிளை. |