பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் விடுமுறைக் காலங்களில், இஸ்லாமிய மார்க்க ஒழுக்கப் போதனைகளைக் கற்பிக்கும் பொருட்டு, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் பல்லாண்டு காலமாக செயல்பட்டு வருகிறது மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம். இறைமறை குர்ஆனை மனனம் செய்வதற்காக திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு) பிரிவும் இம்மத்ரஸா நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மத்ரஸாவின் மார்க்க விழாக்கள் இம்மாதம் 21, 22, 23 தேதிகளில் நடைபெற்றன. விழா நிகழ்வுகள் குறித்து மத்ரஸா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது மாண்புயர் மத்ரஸா ஹாமிதிய்யாவின் 42ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு இக்கல்வி நிலையத்தின் மகத்தான மார்க்க விழாக்கள் மீலாதுந்நபி, மீலாது கௌது, மீலாது ஹாமித் ஒலியுல்லாஹ், அருள்மறை திருக்குர்ஆன் பட்டமளிப்பு ஆகிய விழாக்கள் இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 21, 22, 23 (சனி, ஞாயிறு, திங்கள்) ஆகிய தேதிகளில் இறையருளால் நனிசிறப்புடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ள, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
21.05.2011 - விழா துவக்க நாளன்று அதிகாலை 06.30 மணிக்கு மத்ரஸா மாணவர்களின் முதற்கட்ட நகர்வலம் நடைபெற்றது. அன்று காலை 09.30 மணி முதல் முதல் இரவு 09.30 மணி வரை மத்ரஸா மாணவர்களின் பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டன. நகரப் பிரமுகர்கள் இப்போட்டிகளில் தலைமையேற்றும், முன்னிலை வகித்தும் சிறப்பித்துத் தந்தனர்.
மறுநாள் 22.05.2011 அன்று அதிகாலை 06.30 மணிக்கு மத்ரஸா மாணவர்களின் இரண்டாம் கட்ட நகர்வலம் நடைபெற்றது.
அன்று காலை 09.30 மணி முதல் மாணவர்களுக்கான பல்சுவைப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றது. அன்று மாலை 05.00 மணிக்கு மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் தஃப்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. துவக்கமாக, கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் சமாதானக் கொடியேற்றி வைத்தார்.
நமதூரைச் சார்ந்த தொழிலதிபர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
வண்ணமயமான இவ்வணிவகுப்பு மற்றும் தஃப்ஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களின் கண்களுக்கு பெரும் விருந்து படைத்தது. இந்த அணிவகுப்பிற்காக, பள்ளி விடுமுறை காலத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு வேண்டிய ஊக்கமளிக்கப்பட்டு ஒரு மாத காலம் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த நகரப் பிரமுகர்களுக்கு மத்ரஸா முதல்வர் அல்ஹாஜ் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ சால்வை அணிவித்து கவுரவித்தார்.
அன்றிரவு சன்மார்க்கப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.
மூன்றாம் நாளன்று காலை 10.00 மணிக்கு, மத்ரஸாவின் ஒரு பிரிவாக இயங்கிவரும் “ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா” என்ற பெயரிலான திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள 6 மாணவர்களுக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்த இவ்விழாவில் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வார் அரபிக்கல்லூரியின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நிஜாமுத்தீன் அஹ்ஸனீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, திருமறை குர்ஆனின் மகத்துவம், அதனை மனனம் செய்வதின் சிறப்புகள், அதனை ஓதுவதின் மகத்துவங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
ஆலிம் பெருமக்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, மத்ரஸா முதல்வர் அல்ஹாஜ் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ மத்ரஸா குறித்து அறிமுகவுரையாற்றினார். பின்னர், மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, பட்டமளிப்பு விளக்கவுரையாற்றினார்.
பின்னர் மாணவர்களுக்கான ஸனது - பட்டங்களை மத்ரஸாவின் முதன்மைப் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ வழங்கினார்.
பின்னர், பல்வேறு துஆக்கள் ஆறு தலைப்புகளில் தொகுக்கப்பட்ட “மஜ்மூஉத் துஆ” என்ற பிரார்த்தனைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டு, மத்ரஸாவின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. துஆவுடன் பட்டமளிப்பு விழா நிறைவுற்றது.
அன்று மாலை 05.00 மணி முதல் மத்ரஸா மாணவர்களின் கலந்துரையாடல்கள், பாடல்கள், பேச்சுக்கள் சன்மார்க்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் பாக்கவீ அஹ்ஸனீ சிறப்புரையாற்றினார்.
மஃரிபுக்குப் பின் மாணவர்களின் சன்மார்க்க கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. நிறைவாக, சிறப்பு விருந்தினர் மவ்லவீ ஹாஃபிழ் நிஜாமுத்தீன் அஹ்ஸனீ சிறப்புரையாற்றினார்.
நிறைவாக, மத்ரஸா பாடங்களில் சிறப்புத் தோச்சி பெற்ற மாணவர்களுக்கும், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும் மத்ரஸா நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்பரிசுகளை நகரப் பிரமுகர்கள் தமது கரங்களால் வழங்கினர். துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
முன்னதாக, முதல் நாளன்றும், இரண்டாம் நாளன்றும் மாணவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
மறுநாள் 23.05.2011 அன்று மாலையில், பட்டம் பெற்ற ஹாஃபிழ் மாணவர்கள் தஃப்ஸ் முழங்க, அரபி பைத் பாடல்கள் இசைக்கப்பட்டு நகர்வலமாக அவரவர் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அன்றிரவு மத்ரஸா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் நிறுவனங்கள் அனுசரணையளித்த பரிசுகள் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. (பட்டம் பெற்ற மாணவர்கள் குறித்த விபரங்கள் செய்தி எண் 6254இல் தரப்பட்டுள்ளது.)
நிகழ்ச்சிகள் அனைத்திலும் பொதுமக்களும், மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்ரஸா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்புற செய்திருந்தனர்.
இவ்வாறு மத்ரஸா ஹாமிதிய்யா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்களில் உதவி:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |